தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபாரிகள் பொட்டலமிடாமல் சில்லறையாக சமையல் எண்ணெய் விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்கும் வகையில் அரசின் உணவு பாதுகாப்புத் துறை தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வருகிற 14-ந் தேதி வரை சமையல் எண்ணெயிலிருந்து கண்காணிப்பு உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வு செய்யும் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உணவு பொருள் வியாபாரிகள் முழுமையான லேபிள் விவரங்கள் உள்ள கூட்டுத் தாவர எண்ணெய் மற்றும் இதர சமையல் எண்ணெய் பொட்டலங்களைத் தான் விற்பனை செய்ய வேண்டும்.
கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அதிகம் உள்ளது போல் தவறாக வழிநடத்தும் கூட்டுத் தாவர எண்ணெய் பொட்டலங்களை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. எந்தவொரு சமையல் எண்ணெயையும் பொட்டலமிடப்படாமல் சில்லறையாக விற்பனை செய்யவோ அல்லது அவ்வாறு விற்பனை செய்பவற்றை வாங்கவோ கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மாறாக அதனை பயோ டீசல் தயாரிப்புக்கு விற்றுவிட வேண்டும்.
நுகர்வோர்கள் சமையல் எண்ணெய் பொட்டலங்கள் வாங்கும்போது லேபிள் விவரங்களை கவனமாகப் படித்து வாங்க வேண்டும். எந்தவொரு சமையல் எண்ணெயையும் பொட்டலமிடப்படாமல் சில்லறையாக விற்பனை செய்யவோரிடம் வாங்கக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்பவர்கள் குறித்து 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்காலாம். சமையல் எண்ணெய் பொட்டலங்கள் வாங்கும் பொழுது, அதில் குறிப்பிட்டிருக்கும் டிரான்ஸ்பேட்டி ஆசிட் அளவு குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து வாங்க வேண்டும். டிரான்ஸ்பேட்டி ஆசிட்டின் அளவு 2 சதவீதத்துக்கு மேல் என்று குறிப்பிட்டிருந்தால், அதனை வாங்குவதைத் தவிர்த்து, மேற்கூறிய செல்போன் எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்.


