தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டனர்.
தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் (AICCTU) சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்யும் தொழிலாளர்கள் நான்கு மண்டலத்தை சேர்ந்த (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசாணை படி நாள் தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-/ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். PF, ESI தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.. ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதிக்குள் வழங்கவும் அறிவிப்பு இல்லாமல் பண பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் போன்ற 19 கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26, அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் கடந்த 05.07.2024 அன்று அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சியின் இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.


