செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது வரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயிலில் ஒரு காலத்தில் தேர் ஓடி உள்ளதாக கூறப்படுகிறது. தெப்பம் உள்பட பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்த கோயிலாகவும் இந்த கோயில் இருந்துள்ளது. அருகே மிகப்பெரிய அக்ரகாரம் இருந்துள்ளது. இந்த அக்ரகாரத்தில் வாழ்ந்த பிராமணர்கள் இந்த கோயிலை மிகச்சிறப்பாக திருவிழாக்களோடு கொண்டாடி உள்ளனர். நாளடைவில் இந்த கோயில் வழிபாடு இழந்து விட்டது. முட்புதர்கள் அடர்ந்து இந்த கோயில் ஒரு காலபூஜை திட்டத்துக்குள் வந்து விட்டது. தற்போது இந்த கோயிலில் நெல்லை உழவாரப்பணிகள் குழு தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் உழவாரப்பணி செய்து வருகிறார்கள். தற்போது கோயில் வளாகத்தில் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன் ஆய்வு செய்தார். அவருடன் கோயில் எழுத்தர் இசக்கி முத்து உள்பட பலர் இருந்தனர்.


