வல்லநாடு சிவன் கோவிலில் உழவாரப் பணி நடந்தது. வல்லநாட்டில் கி.பி. 1265 ஆம் ஆண்டு இரண்டாம் சடையவர்ம பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோவில் உள்ள து.இந்தக் கோவில் அருள்மிகு திருமூலநாதர் உடனுறை அருள் தரும் ஆவுடை அம்பாள் திருக்கோவில் என அழைக்கப்படுகிறது. சிவபெருமானை மூலவராகக் கொண்ட ஒன்பதுநவ லிங்கபுரக்கோவில்களில் முதலாவது கோவிலாக இந்தக் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் , மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி திருக்கோவில் மூலவர் திருமூலநாதர் மற்றும் ஆவுடை அம்பாள் மீது நேரடியாக விழும் அற்புதக் காட்சியாகப் பெரும் அதிசயம் நிகழும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான இந்த சிவன் கோவிலில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்துத் தூத்துக்குடி, எட்டயபுரம் அடியவர்க்கு அடியவர்கள் உழவாரப் பணிக்குழு சார்பில் அதன் தலைவர் இம்பீரியல் சொக்கலிங்கம் தலைமையிலான குழுவினரின் உழவாரப் பணி நடந்தது. இப்பணியில் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்து வளர்ந்து காடு போல் காட்சியளித்த சீமைக் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் புல் புதர்கள் வெட்டி எடுத்தல் ,மதில் சுவர் மேல் வளர்ந்த மரங்கள் அகற்றுதல் , கோவில் பாத்திரங்கள் மற்றும் பூஜை சாமான்கள் கழுவிச் சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்றன. பணியின் முடிவில் சுவாமி மற்றும் அம்பாளுக்குக் கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்


