தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய ஜூலை மாதம் 18-ந் தேதி தமிழ் நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவு செய்து அனுப்புவார்.
கட்டுரை போட்டி தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பிலும், பேச்சு போட்டி தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப் போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பிலும் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


