செய்துங்கநல்லூர் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆலயத்தில் கும்பாபிசேகம் நடந்தது.
தென்னகத்துக்கு தில்லை என போற்றப்படுவது செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் கடந்த 25 வருடத்துக்கு முன்பு பராமரிப்பு இன்றி கிடந்தது. ஆலயத்தின் ஆன்மிக பேரரவை சார்பில் உழவாரப்பணி நடந்து கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் முயற்சியால் இந்த ஆலயத்தில் கொடிமரம் நிறுவுதல், பள்ளிஅறை கட்டுதல், 63 நாயன்மார்கள் உள்பட பரிவார தேவதைகள் பிரதிட்சை நடந்தது.
இந்த ஆலயத்தில் 10 நாள் மார்கழி திருவிழா, ஆடி பூரம் உள்பட பல் வேறு திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற இந்த ஆலயத்தில் உள்ள ஆன்மிக பேரரவையினர் ஏற்பாடு செய்து வந்தனர். மேலும் திருவிழா காலங்களில் இந்த ஆலயத்தின் ஐம்பொன் சிலைகளை வாங்கி வந்து ஊர்வலம் நடத்தி பழைய ஆலயத்தில் என்னென்ன திருவிழா நடந்ததோ அதையெல்லாம் நடக்க வைத்தனர்.
இதற்கிடையில் ஆலயத்தில் அறங்காவலராக குரு மாரியப்பன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் திருப்பணி நடந்து தற்போது கும்பாபிசேகம் நடந்துள்ளது.
கும்பாபிசேகத்தினையொட்டி கடந்த 6 ந்தேதி தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முதற்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிசேக பணி துவங்கியது. தொடர்ந்து இரண்டு, மூன்றுகால பூஜைகள் நடந்தது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து 8 ந்«தி காலை கடம் புறப்பாடு நடந்தது. அதன் பின் காலை 7.35மணிக்கு விமான மகா கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து மூலாலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிசேகம் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்காயிலாயப் பரம்பரை செங்கோல் மட 103 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குரு மாரியப்பன், ஆலய ஆய்வாளர் பூ, நம்பி, செயல் அலுவலர் கோவல மணிகண்டன், முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் அறங்காவலர் காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். கும்பாபிசேக ஏற்பாடுகளை கருங்குளம் வெங்கிடாசல வாத்தியார், மணிமூர்த்திஸ்வர ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் வாத்தியார், கோயில் அர்ச்சகர் முத்துராமன் ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து பொதுமக்கள் மற்றும் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.


