தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் உளுந்து பயிரில் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு ரூ.85.219 கோடி இழப்பீடுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-21 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், சோளம், கம்பு பருத்தி, சூரியகாந்தி, எள், நிலக்கடலை மற்றும் நெல் பயிர்களுக்கு 139206 எக்டருக்கு விவசாயிகள் காப்பீடு பதிவு செய்திருந்தனர்.
இதில் மக்காச்சோளம் (45437 எக்டரிலும்) மற்றும் உளுந்து (54897 எக்டரிலும்) பயிர்கள் 100034 எக்டர் பரப்பிற்கும் மீதமுள்ள பயிர்கள் அனைத்தும் சேர்த்து 39173 எக்டரிலும் காப்பீடு பதிவு செய்யப்பட்டது. பருவம் தவறிய மழையினால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மற்றும் வேளாண்மைத் துறையின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக உளுந்து பயிருக்கு ரூ.85.219 கோடி IFFCO TOKIO காப்பீட்டு நிறுவனத்தால் 95852 பதிவுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்கிற்கும் உரிய தொகை சென்றடையும். ஓட்டப்பிடாரம் வட்டாரத்திற்கு 31825 பதிவுகளுக்கு ரூ,29.974 கோடி, கயத்தார் வட்டாரத்திற்கு 22270 பதிவுகளுக்கு ரூ.24.131 கோடி, கோவில்பட்டி வட்டாரத்திற்கு 14240 பதிவுகளுக்கு ரூ.12.261 கோடி, விளாத்திகுளம் வட்டாரத்திற்கு 14062 பதிவுகளுக்கு ரூ.11.749 கோடி, கருங்குளம் வட்டாரத்திற்கு 4355 பதிவுகளுக்கு ரூ.3.872 கோடி, புதூர் வட்டாரத்திற்கு 7786 பதிவுகளுக்கு ரூ.1.953 கோடி மற்றும் தூத்துக்குடி வட்டாரத்திற்கு 1314 பதிவுகளுக்கு ரூ.1.279 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 95852 பதிவுகளுக்கு ரூ.85.219 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகை இப்பருவத்தில் தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் விடுவிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் மிக அதிகமாகும். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.20.45 கோடியுடன் உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.85.22 கோடி சேர்த்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை 105.67 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


