தூத்துக்குடியில் பட்டாசு கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (45). இவர் அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தூத்துக்குடி கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த ஜேசுராஜா (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரீகன் (28) ஆகிய இருவர், அந்தோணிராஜிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பணம் தர மறுத்த அந்தோணிராஜுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததுடன், கடையிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்த முயன்றதாகவும் தெரிகிறது. இந்த மிரட்டல் சம்பவம் குறித்து அந்தோணிராஜ் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜேசுராஜாவை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ரீகனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் கடைக்காரரை மிரட்டிய சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


