இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் என்றாலே மிகப்பெரிய ஆளுமை. நான் சிறு வயதாக இருக்கும் போது, காமராஜரின் வாரிசு என்று அறிமுகப்படுத்தப்பட்டவர். அவர் மேடைபேச்சு என்னை மிகவும் ஈர்த்து இருந்தது. என் தந்தை காங்கிரஸில் இருந்தாலும், இவருக்காக எங்கள் அண்ணன் கா.கா.தே.காவில் பணியாற்றினார். இவர் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் இவர் பேசிய பேச்சை கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் டேப்ரிக்கார்டரில் அவர் பேச்சை பதிந்து வீட்டில் வைத்து கேட்போம். “கரும்பை ஏற்றுமதி செய்ய வேண்டுமாம். சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டுமாம்” என அவர் கம்பீரமாய் பேசும் பேச்சுக்கு நாங்கள் அடிமை. “வேறு ஒருவன் அம்மெடுத்து குத்தினால் ராமா ராமா என்னை அம்மெடுத்து குத்துகிறான் பார் என்று சொல்லலாம். ஆனால் ராமனே இங்க அம்பெடுத்து குத்தினால் யாரிடம் போய் சொல்ல” என அவர் அரசியலில் கர்ஜிக்கும் குரல் இப்போதும் என் காதில் ஒலிகிறது.
அவர் கா.கா.தே. க கட்சி துவங்கி, தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ என ஐந்து தடவை எம்.எல்.ஏ வாக இருந்தவர். சாத்தான்குளம் தொகுதியில் தொடர்ந்து அவர் இரண்டு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்தார். தொகுதிக்கே வராத எம்.எல்.ஏ என்று குமரி அனந்தனை விமர்சனம் செய்தாலும் தொடர்ந்து ஜெயித்துவிடுவார். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவரின் இயக்க பாடலான “சுடர் கொடி ஏற்றுங்கள்” என்ற பாடலை டி.எம்.எஸ் பாட அதன் இசைத்தட்டை கிராமங்களில் நடைபெறும் திருமண வீடுகளில் ஒலிபரப்பி மகிழ்வோம். சாத்தான்குளம் தொகுதியில் எம்.எல்-.எ வேட்பாளர்கள் பெயரில் எனது அண்ணன் தங்கபாண்டியன் பெயரும் இருந்தது.அதன் பிறகே எஸ்.என். ராமசாமி அண்ணாச்சிக்கு சீட் கிடைத்தது.
இதற்கிடையில் நான், எழுத ஆரம்பித்து விட்டேன். 1987 ல் தேவி வார இதழில் என்னுடைய முதல் துணுக்கு வெளிவந்தது. தேசிய நல்லாசிரியர் செல்லப்பா அய்யாவிடம் கூறினேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு நெல்லை பராசக்தி பில்டிங்கில் அப்போது இருந்த வசந்த் அன்கோ அலுவலகத்தில் வைத்து என்னை இலக்கிய செல்வரை சந்திக்க வைத்தார்.
அப்போது இலக்கிச்செல்வர் சொன்னது. “ஒரே ஒரு துணுக்கு தானே எழுதியிருக்கிறாய். நிறைய எழுது உன்னை தேடி புகழ் வரும்” என்று கூறினார். காலங்கள் கடந்தது. அதன் பின் அவரை அடிக்கடி சந்திக்க இயலவில்லை. ஆனாலும் பனை வாரியத்துக்கு அவர் தலைவராக இருந்த போது எங்கள் பகுதியில் பனை தொழிலாளிகளுக்கு வாரியம் அமைத்து அவர்களை உறுப்பினராக சேர்த்து விட உதவியாக இருந்தேன். இதற்கிடையில் இலக்கிய செல்வரின் சகோதரர் வசந்த் குமார் அண்ணாச்சி கொடுத்த வாய்ப்பின் படி வசந்த் தொலைக்காட்சியில் நெல்லை மண்பேசும் சரித்திரம் என்ற தொடரில் 75 வாரம் பயணித்தேன். இதனால் என் வாழ்வில் பல திருப்பு முனை ஏற்பட்டது. அப்போது நான் சேகரித்த தகவலைக் கொண்டு நெல்லை ஜமீன்கள், நெல்லை துறைமுகங்கள், தென்பாண்டிச்சீமையிலே பாகம் 1, பாகம் 2 , ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் என பல நூல்களை எழுதினேன்.
37 வருடங்கள் ஓடி விட்டது. ஒரு நாள் தேசிய நல்லாசிரியர் செல்லப்பா அய்யா என்னிடம் பேசினார். “இலக்கிய செல்வர் உங்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறார். அவரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறேன்” என்றார். ஆனால் அவரை சந்திக்க இயலாமலேயே போய் விட்டது. “ஒரே ஒரு துணுக்கு தானே எழுதியிருக்கிறாய். நிறைய எழுது உன்னை தேடி புகழ் வரும்” என்று அன்று- இலக்கிய செல்வர் சொன்ன வார்த்தை இன்று பலித்து விட்டது. ஆனால் நான்தான் அவரை நேரில் சந்திக்காமலேயே போய் விட்டேன்.
ஆனாலும் இலக்கியசெல்வரின் ஆசிர்வாதம் எப்போதும் என்னை ஆசிர்வதிக்கும் -முத்தாலங்குறிச்சி காமராசு


