முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவார்கள். இந்த உண்டியல் காணிக்கைகள் மாதத்திற்கு இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் காலையில் தொடங்கியது. இதற்காக கோவில் உண்டியலில் இருந்த காணிக்கைகள் அனைத்தும் கோவில் பணியாளர்கள் மொத்தமாக வசந்த மண்டபத்திற்கு கொண்டு வந்து அங்கு பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.
அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணிக் கொண்டிருந்த போது உண்டியலில் ஓம் என்று பொறிக்கப்பட்ட வெள்ளி வேல் ஒன்று இருந்தது. இந்த வேலினை முருக பக்தர் ஒருவர் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். இந்த வேலானது அப்படியே பார்ப்பதற்கு ஓம் என்ற தோற்றத்தில் கம்பீரமாக நின்றும், வெள்ளியில் ஜோலித்தும் காணப்பட்டது.
இந்த வேலானது இரண்டடி அடி உயரம் கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட 5 கிலோ எடை கொண்டதாகும்.
அந்த வேல் தொகையுடன் கூடிய மயில் மேல் முருகனின் வேல் இருப்பது போல் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை கோவில் உண்டியல் எண்ணும் பணியாளர்கள் வைத்த கண் வாங்காமல் மெயிசிலிர்த்த படி கண்டு ரசித்தனர்.
அதைத் தொடர்ந்து கோவில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
முருக பக்தர் ஒருவர் இரண்டடி உயரத்தில் 5 கிலோ கொண்ட வெள்ளி வேலை முருகனுக்கு வழங்கிய சம்பவம் திருச்செந்தூர் மட்டுமல்லாமல் முருக பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


