திருக்கோளூர் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜன், திருச்செந்தூர் உதவி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் ஆழ்வார்திருநகரி கால்நடை மருத்துவமனை சார்பில் திருக்கோளூர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் பிரபஞ்சன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்பு நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளுக்கு பரிசும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு விருதும் வழங்கினார்.
மருத்துவ முகாமில் ஆழ்வார் திருநகரி கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆடு, கோழி களுக்கு நோய் தடுப்பு, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை மற்றும் ஸ்கேன் வசதி சிகிச்சை அளித்தனர். கண்காட்சியில் அசோலா வளர்ப்பு, பசுந்தீவன புல் வளர்ப்பு, அடர் தீவனங்களின் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை ஏராளமான விவசாயிகள் கண்டு பயனடைந்தனர்.


