தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 405 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1973 பேர் போட்டியிடுகின்றனர். 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளில் உள்ள 414 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி துவங்கி கடந்த 4ம் தேதி வரை நடந்தது. 414 பதவிகளுக்கு மொத்தம் 2,276 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர் பதவிக்கு 480 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதன் மீதான பரிசீலனை, கடந்த 5ம் தேதி நடந்தது. மாநகராட்சியில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 475 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதேபோல் கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகளிலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 542 மனுக்களில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. 18 பேரூராட்சிகளிலும் தாக்கலான 1254 மனுக்களில் 30 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 1224 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 2276 மனுக்களில் 48 மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு 2228 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்புனுக்களை வாபஸ்பெற நேற்று கடைசி நாளாகும். மாலை வரை மாவட்டம் முழுவதும் 246 பேர் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியானது. இதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 443 பேர் போட்டியிடுகின்றனர். கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 276 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையின் போது 2 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 274 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று 47 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் 227 வேட்பாளர்கள் இறுதிகளத்தில் உள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜாராம் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சியில் 117 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், நேற்று 10 பேர் வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதிபட்டியலின்படி 107 பேர் போட்டியிடுகின்றனர். ஆறுமுகநேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நேற்று 5 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதன் காரணமாக 74 பேர் களத்தில் உள்ளனர்.
ஆத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 71 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் நேற்று 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். தற்போது 63 பேர் களத்தில் உள்ளனர். இதில் 12வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட மகேஸ்வரி முருகப்பெருமாள் போட்டியின்றி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
உடன்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 106 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பரிசீலனையின்போது 2 சுயேட்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று 9 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்களை திரும்ப பெற்றனர். ஏரல் பேரூராட்சியில் 69 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 2 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 67 பேர் இறுதிகளத்தில் உள்ளனர்.
இதேபோல் பெருங்குளம் பேருராட்சியில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 2 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒருவர் வாபஸ் வாங்கியதையடுத்து 43 பேர் போட்டியிடுகின்றனர். சாயர்புரம் பேரூராட்சியில் 80 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 4 பேர் வாபஸ் வாங்கினர். இறுதிகளத்தில் 76 பேர் போட்டியிடுகின்றனர்.சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 57 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் 49 பேர் போட்டியில் உள்ளனர். புதூர் மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சியில் தலா 15 வார்டுகள் வீதம் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன.
இதில் விளாத்திகுளம் பேரூராட்சியில் மொத்தம் 96 மனுக்கள் பெறப்பட்டது. 2 மனுக்கள் தள்ளுபடி ஆனது. நேற்று 20 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதன் காரணமாக விளாத்திகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் மொத்தம் 74 பேர் போட்டியிடுகின்றனர். புதூர் பேரூராட்சியில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. கடைசி நாளான நேற்று 9 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 49 பேர் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 462 பேரும், 18 பேரூராட்சிகளில் 1068 பேரும் இறுதிவேட்பாளர்கள் பட்டியலின்படி களத்தில் உள்ளனர். 18 பேரூராட்சிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதனால் தற்போது மாவட்டத்தில் 405 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1973 பேர் போட்டியிடுகின்றனர்.