தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பள்ளங்கிணறு கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜ் மகன் ரேவந்த் குமார் (28). இவர் கோயமுத்தூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். தற்போது தசரா திருவிழாவை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே நின்றுகொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பலத்தகாயம் அடைந்த ரேவந்த்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பள்ளங்கிணறு கிராமத்தில் தசரா திருவிழா நடத்துவது தொடர்பாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்ததுள்ளது. தசராவுக்காக வெளியூரிலிருந்து வந்திருந்த ரேவந்த் குமாரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் உட்பட 4பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


