கயத்தாறு அருகே மின் கம்பத்தில் மோதி லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். லோடு ஆட்டோ ஓட்டுநரான இவர் ஆட்டோவில் 7 பேரை ஏற்றிக் கொண்டு ஆவுடையார்புரத்தில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தெற்கு மயிலோடை அருகே சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதிய சுமை ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், கீழக்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் தொழிலாளி மோகன் (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் ராமச்சந்திரன் உள்பட 3 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


