
கருங்குளம் பகுதியில் நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல். கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஆலோசனை.
நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட கருங்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஆலோசனை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
கருங்குளம் வட்டாரத்தில் 1050 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரானது தற்போது கதிர் வரும் நிலையில் உள்ளது. மணக்கரை, சென்னல்பட்டி கிராமங்களில் உள்ள நெற்பயிரில் ஆங்காங்கே வெண்கதிர்கள் கணப்படுகிறது. இந்த வெண்கதிர்கள் தண்டு துளைப்பான் எனப்படும் குருத்துப்பூச்சி தாக்குதலினால் ஏற்படும் அறிகுறியாகும்.
தண்டு துளைப்பான் தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு கீழ்க்கண்டவாறு விவசாயிகள் செய்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைகளை மேற்கொள்ள வேண்டும். வயலில் விளக்குபொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை சேகரித்து அழிக்க வேண்டும். நடவு வயல்களில் வரப்புகளை சுத்தமாக வைப்பதன் மூலம் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்கலாம். டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை 1 ஏக்கருக்கு 1 சிசி என்ற அளவில் ஆங்காங்கே கட்டி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும் பூச்சித்தாக்குதல் பொருளாதார சேத நிலையை விட அதிகமாக தென்பட்டால் பின் வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை நேரங்களில் பயிர்கள் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
குளோர் ஆன்ட்ரானிலிப்ரோல் – 18.5% எஸ்சி 6 மி.லி அல்லது தையோமீத்தாக்சாம் 25% டபிள்யூஜி 4 கிராம் அல்லது புளுபென்டிமைட் 20% டபிள்யூஜி 5 கிராம் என்ற அளவில் ஏதேனும் ஒரு மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேனாடும்.
மேற்கண்டவாறு பயிர்பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து கட்டுப்படுத்திடுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்