தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் வெள்ளாடுகள் மற்றும் புறாக்கள் கடத்தப்பட இருப்பதாகக் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமைக்காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சுராஜா ஆகியோர் அடங்கிய க்யூ பிரிவு போலீசார் திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 9.45 மணியளவில் போலீசார் ரோந்து சென்றபோது, திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக வெள்ளாடுகளையும் புறாக்களையும் ஏற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரட்டை எஞ்சின் பைபர் படகு, அதிலிருந்த 8 வெள்ளாடுகள் மற்றும் 3 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த புறாக்களைக் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு, ஆடுகள் மற்றும் புறாக்களின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கடத்தல்காரர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஆடுகள், புறாக்களை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.


