சங்கரலிங்கபுரம் அருகே தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது செடி பறிக்கும் எந்திரத்தில் சேலை சிக்கியதால் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ரெகுராமபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி இருளாயி (65). இவர்களுக்கு குழந்தையில்லை. கருப்பசாமி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இருளாயி அதே பகுதியில் உள்ள பால்ராஜ் மகன் கார்த்திக் (35) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று அந்த தோட்டத்தில் வௌவால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மேகலிங்கம் (50) என்பவருக்கு சொந்தமான கிரசர் இயந்திரம் மூலம் சீனரைக்காய் செடிகளை பிடுங்கும் பணி நடந்துள்ளது. அப்போது வேலை பார்த்து கொண்டிருந்த இருளாயியின் சேலை இயந்திரத்தில் சிக்கியது. அதில் அவரது உடல் பல துண்டுகளாக சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடல் பாகங்களை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


