கிட்டத்தட்ட நான் தாமிரபரணியை பற்றி எழுத ஆரம்பித்து 35 வருடங்கள் ஆரம்பித்துவிட்டது. சுமார் 24 வருடங்களுக்கு முன்பு நான் தாமிரபரணி பற்றி எழுதும் போது என் நதிக்கு இவ்வளவு பெருமையா, இவளுக்–கு வருடத்துக்கு ஒருமுறையாவது பூஜை செய்ய வேண்டாமா? என நினைத்தேன். அதன் பயனாக நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமத்தில் பூஜையை துவங்கினேன். என்னோடு எனது பேரன் நாட்டார்குளம் எஸ்.கே.திருப்பதி கலந்துகொண்டார். எதிர்பாராத விதமாக முத்தாலங்குறிச்சிக்கு எனக்கும் உண்டான தொடர்ப்பு குறைந்தது போல தெரிந்தது. எனவே தொடர்ந்து இந்த பூஜையை செய்ய இயலவில்லை. ஆனாலும் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வருடம் தோறும் வைகாசி விசாகம் அன்று நடத்தி வந்தேன். அதோடு மட்டுமல்லாமல் நதியை காப்பாற்ற உறுதி மொழி எடுப்பது, மரக்கன்று நடுவது என என் பணி தொடர்ந்தது.
மகா பு-ஷ்கர விழா 2018 ஆம் ஆண்டு வந்தது. இந்த வேளையில் தான் எனது ஊர் தெய்வமான நல்லபிள்ளை பெற்ற குணவதி அம்மனை நன்கு கவனித்தேன். தாமிரபரணி ஒடிவரும் வேளையில் வடக்கில் இருந்து தெற்காக தென்னகத்து காசியாக ஓடி வரும் முறப்பநாடு பகுதியில் 6 லட்சம் பேர் கூடுகிறார்கள். ஆழிகுடியிலும் மக்கள் அதிகமாக வந்து ஸ்ஞானம் செய்கிறார்கள். அந்த வேளையில் எங்கள் குணவதி அம்மனை கவனிக்கிறேன். வடக்குநோக்கி அம்மன் இருக்கிறார். தாமிரபரணி நதியோ வடக்கிலிருந்து தெற்காக ஓடி அம்மனை வணங்கி பின் செல்கிறது. ஆகா. எவ்வளவு பெரிய புண்ணிய பூமியில் நாம் பிறந்து இருக்கிறோம். என் அன்னை தாமிரபரணி வணங்கும் ஒரே தெய்வம் நம்ம ஊரு குணவதியம்மன் . நான் பூரித்து போய் விட்டேன். புஷ்கர திருவிழா முடிந்தது. இனி வருடந்தோறும் இதற்கான பூஜை படித்துறையில் அதிகமாக நடைபெறாது. ஆனால் நாம் வருடந்தோறும் குருபெயர்ச்சி விழா, தாமிரபரணி பிறந்தநாள் வைகாசி விசாக திருவிழா இதை இணைத்து பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு எனது அன்பு நண்பர் தொழிலதிபர் அண்ணாமலை நன்கொடையாளராக தொடர ஆரம்பித்தார். எனது நண்பர் முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி முனைவர் கந்தசுப்பு போன்ற நட்புகளுடன் குணவதி அம்மன் கோயில் முன்புள்ள படித்துறையில் இந்த பூஜையை தொடர்ந்தோம்.
இந்த வருடம் இந்த பூஜை 25 வருடத்தினை தொட்டு விட்டது. இனி ஒவ்வொரு இடமாக சென்று தாமிரபரணி பூஜையை செய்யக்கூடாது. நிரந்தரமாக ஒரு இடத்தில் இதை ஒப்படைக்க வேண்டும். முத்தாலங்குறிச்சி காமராசு காலத்துக்கு பிறகும் இந்த பூஜை தொடர்ந்து நடைபெறவேண்டும். யாரிடம் ஒப்படைக்கலாம் என நினைத்திருக்கும் நேரத்தில் தான் நான் அறங்காவலராக பணிபுரியும் முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வர், லெட்சுமி நரசிம்மர், இராம விநாயகர் ஆலயத்தில் ஒப்படைக்க முடிவு செய்தேன்.
ஏற்கனவே முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் பக்த ஜபா மூலமாக சோமசுந்தரம் அய்யாவும், சேசப்பன் அவர்களும் சுவாதியை மிகச்சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள். கடந்த மூன்று வாரங்களாக பிரதோஷமும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆகவே இவர்களிடமே தாமிரபரணி பிறந்தநாள் பூஜையையும் ஒப்படைத்துவிடுவோம் என நினைத்தேன்.
தொழிலதிபர் அண்ணாமலை நன்கொடையாளராக தொடருவார். நமது மற்ற அன்பர்களும் இதில் தொடரலாம் என முடிவு செய்து சோமசுந்தரம் அய்யாவிடமும், சேசப்பன் அய்யாவிடமும் ஒப்புதல் கேட்டேன்.
வைகாசி விசாகமோ முருகன் பிறந்த நாள், நம்மாழ்வார் பிறந்த நாள், குபேரன் தாமிரபரணி ஆற்றில் குளித்து இழந்த பொருளை மீட்ட நாள் இன்று தான் நமது தாமிரபரணியை அகத்திய பெருமான் உருவாக்கிய நாள். இந்த நாள் வருகிற 8 ந்தேதி வருகிறது.
அந்த சமயத்தில் சுவாதியும், பிரதோஷம் வருவது மிகச்சிறப்பு. எனவே தெய்வங்களே இணைந்து இந்த பூஜையை மிகச்சிறப்பாக செய்ய உத்தரவிட்டு உள்ளது என நினைத்தேன்.
எனவே இந்த விழாவை முப்பெரும் விழாவாக எடுக்க இறையுள்ளம் கூடி வந்துள்ளது. தாங்கள் அனைவரும் இந்த பூஜையில் கலந்துகொண்டு. முத்தாலங்குறிச்சி கிராமத்தின் குலதெய்வமா£ன குணவதியம்மனை நமது தாய் தாமிரபரணி வணங்கி செல்லும் இடத்தில் உள்ள தீர்த்த கட்டத்தில் தாமிரபரணி தாயுக்கு அனைத்து பூஜையும் செய்திட வேண்டுகிறேன்.
நமது கோயிலில் தொடர்ந்து திருப்பணி நடைபெறுகிறது. மூன்றில் ஒரு பங்குதான் சுற்றுப்புறச்சுவர் கட்டியுள்ளோம். மேலும் இரு பகுதியை கட்டவேண்டும். அன்பர் ஒருவர் பக்தர்கள் தங்குவதற்கு ஷெட் போட்டு தருவதாக கூறியுள்ளார். அதை பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்விடத்தில் நமது பக்தர்களுக்காக ஒரு கழிவறை கட்டிட வேண்டும்.
நமது லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஒப்புதலுக்கு சென்றுள்ளது. அதற்கான நடவடிக்கையும் விரைவில் நடக்கும். சிவன் கோயில் முழுக்க முழுக்க புதிதாக கல்கட்டிடமாக கட்ட திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். நமது ஊரில் இருந்து 7 தலைமுறைக்கு முன்னால் குடிபெயர்ந்த பிராமணர்களை ஒன்று திரட்டி வருகிறோம்.நமது கோயிலில் பூர்விகமாக வாழ்ந்த இருகண் தெரியாத கந்தாமி புலவர், முருகன் அருளாளும் வீரபாண்டிய கட்டபொம்மன் அருளாலும் இருகண் தெரிந்த வரலாற்றுக்கு சொந்த காரர். அவர் வாழ்ந்து கவி பாடிய இடம் நமது கோயில் தான். அவரது வாரிசுதாரர் முத்துசுவாமி அய்யா நமது கோயிலுக்கு திருப்பணி செய்ய சம்மதம் தெரிவித்து உள்ளார்கள். நமது ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வரதராஜன் அய்யா திருப்பணிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளார்கள். இவையெல்லாம் நம் மனதுக்கு சந்தோசத்தினை கொடுத்துள்ளது. எல்லா பணியும் விரைவில் நடைபெறும். அதற்கு இறைவன் அருள் புரிவார்.
இந்த முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு, உங்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று செல்லுங்கள். குபேரனை போல் தாமிரபரணியில் நீராடி இழந்த பொருள்களை மீட்டுச் செல்லுங்கள். இந்த பூஜை நடைபெறும் வேளையில் தாமிரபரணிக்கு பணி செய்வவர் என்ற முறையில் என்னை பாபநாசம் தாமிரபரணி கரையில் வைத்து பாராட்டுகிறார்கள். எல்லாம் என் அன்னை தாமிரபரணியின் அருள். நான் பூஜை வேளையில் இல்லாவிட்டாலும் அன்னையின் அருளை பாராட்டு மூலமாக பெற்றுக்கொண்டிருப்பேன் – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


