விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 53 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில், ஸ்ரீ புது அம்மன் கோவில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் வைகாசி கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 53 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
இதில் சிறிய மாடுகளுக்கு 12 கிலோமீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்பந்தயத்தை காண சாலையின் இருபுறமும் நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் நின்று போட்டியை கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை மற்றும் பரிசுகள் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


