ரிலையன்ஸ் அறக்கட்டளை தென்காசி மாவட்டத்தில் பண்ணைப்பள்ளி திட்டத்தின் மூலம் நெல், மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை பண்படுத்தல் முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்களை பல்வேறு விழிப்புணர்வு கருவிகள் மூலம் தெரிவித்துவருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ராமானுஜம்புதூர் மற்றும் சேரகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் நெல், உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை பயிரிடுவது மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பையும் முக்கிய வாழ்வாதாரமாகவும் செய்து வருகிறார்கள். தற்போது கடும் வெப்பம் நிலவுவதால் கால்நடைகள் பெரிதும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது, சிலநேரம் கால்நடைகள் இறந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் அதிகமாக இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் கால்நடை நலம் மற்றும் நோய் மேலாண்மை குறித்து டயல் அவுட் கான்பிரன்ஸ் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பறக்கை கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் கால்நடை மருத்துவர் ஜென்ஜிஸ் இனிகோ அவர்கள் கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மரி ஆடுகள், மற்றும் கோழிகளை கோடைகாலங்களில் தாக்கும் நோய்கள் குறித்தும் மற்றும் அவைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் குடற்புழு நீக்க மருந்து கொடுப்பதின் அவசியம், மடிவீக்க நோயிலிருந்து கறவை மாடுகளை பாதுகாப்பது, உண்ணிகளை தவிர்த்தல், உணவு மேலாண்மை, தடுப்பு ஊசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் சுமார் 30 கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


