தாமிரபரணி ஆற்றை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்காவிட்டால், விரைவில் அழிந்து போகும் அபாயம் உள்ளது என்று நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்.
தாமிரபரணி ஆற்றில் சாக்கடை, கழிவு நீர் கலப்பதைத் தடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடர்ந்தார். வழக்கின் அடிப்படையில், ராஜஸ்தானில் பல்வேறு வட நதிகளை மீட்டெடுத்த நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார். 2ஆவது நாளாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப் பகுதி, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தாமிரபரணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மிகுந்த கவனத்துடன் அதை பாதுகாக்காவிட்டால், விரைவில் அழிந்து போகும் அபாயம் உள்ளது. தாமிரபரணி நதியைப் பராமரிப்பதில் அனைபரக்கும் பங்கு இருக்கிறது. பொதுமக்கள் குப்பைகளை நதியில் கொட்டாமல் இருக்க வேண்டும்.
கடந்த 80 ஆண்டுகளில், ஆற்றின் வடிவம், அதன் சுற்றுச்சூழல், ஓட்டம் பெரிதளவில் மாறியுள்ளது. ஆற்றின் பாதை மாறும்போது, பெரிய அளவிலான பேரிடர்களை சந்திக்க நேரிடும். நீதிமன்றமும், அரசும் தீவிரமாக கண்காணித்து, தாமிரபரணி ஆற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றார்.


