பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் முழுக்க முழுக்க திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது.
இந்த இரு படங்களும் கிராமத்து மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்குநர் மாரிசெல்வராஜ் ஒரு படத்தினை உருவாக்கி வந்தார். இந்த படத்திற்கு மாமன்னன் என்று பெயரிடப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் இயக்குநர் மாரிசெல்வராஜின் 4வது படமான வாழை திரைப்படத்தின் தொடக்க விழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி பகுதியில் தொடங்கியது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது அதன் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் மாமன்னன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பையும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் எடுக்க திட்டமிட்டார். இதனையடுத்து கடந்த 4 தினங்களாக இந்த மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கருங்குளம் பகுதியில் நடந்து வந்தது. ஒரு சண்டைக்காட்சிகள் மற்றும் பல காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் சண்டையிடும் காட்சிகளும், நடிகையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 4 தினங்களாக நடந்து வந்த மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜின் 4வது திரைப்படமான வாழை திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இயக்குநர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
மாமன்னன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


