தொடர் மழையின் காரணமாக கொங்கராயகுறிச்சியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் கொங்கராயகுறிச்சியில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதால் அப்பகுதி மக்களை வருவாய் துறையினர் திருமண மண்டபங்களில் தங்க வைத்து வருகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும் ஆண்டுதோறும் மழை காலங்களில் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கிறது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஶ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதி மக்கள், ஒவ்வொரு வருடமும் பருவமழை காலங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து நாங்கள் மிகவும் பாதிக்க படுகிறோம், அங்கு நிரந்தரமாக தண்ணீர் உட்புகாத வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றங்கரை ஓரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு இதுவரையில் பட்டா வழங்கப்படவில்லை அதனை ஆய்வு செய்து விரைவில் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அமிர்தராஜ் உடனடியாக உடன் வந்திருந்த அதிகாரிகளிடம் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் உட்புகாதவாறு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு செய்து தருமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம், கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேது ராமலிங்கம், கிளார்க் பிராங்கிளின், தலையாரி ஆனந்த், மாவட்ட காங்கிரஸ் துணை பொறுப்பாளர் சங்கர், நேர்முக உதவியாளர் போஸ், ஒன்றிய கவுன்சிலர் அப்துல் கரீம், திமுக கிளைச் செயலாளர் அருள் மேயர், கொங்கராயகுறிச்சி காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் பெருமாள், கருங்குளம் வட்டாரத் தலைவர் புங்கன், வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் நயினார்,சிவசுப்பிரமணியன், சித்தார்த்தன், வனிதா ஸ்டாலின், மாரிசெல்வம், ரமேஷ், கண்ணன், முத்துகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


