ஸ்ரீவைகுண்டம் அருகே சாலையில் ரூ.15 ஆயிரம் பணத்துடன் கிடந்த மணிபர்சை ஒப்படைத்த பெண்களை போலீசார் பாராட்டினர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி நாகேஸ்வரி. இவர் நேற்று கருங்குளம் அருகே உள்ள சேரகுளத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவுக்கு சென்றார். அப்போது சேரகுளம் செல்லும் வழியில் தனது கையில் வைத்திருந்த மணிபர்சை தவற விட்டுவிட்டார். அதில் ரூ.15 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் இருந்தன.
அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீவைகுண்டம் அருகே பொன்னன்குறிச்சி பகுதியை சேர்ந்த காந்தாரி மனைவி மரகதம் மற்றும் கருப்பசாமி மனைவி சுடலை வடிவு ஆகியோர் அந்த மணிபர்சை கண்டெடுத்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் உள்ள ஆவணங்கள் மூலம் போலீசார் நாகேஸ்வரியை தொடர்பு கொண்டு மணிபர்சை ஒப்படைத்தனர். சாலையில் ரூ.15 ஆயிரத்துடன் கிடந்த மணிபர்சை போலீசிடம் ஒப்படைத்த பெண்களை போலீசார் பாராட்டினர்


