வை.கோ. “இரத்தம் கசியும் இதயத்தின் குரல்” என்ற நூலில் சிற்பக் கலையைப் பற்றி எழுதியுள்ளார். கல் வேலைப்பாடு உலகத்திலேயே இந்தியாவிற்குத் தான் முதலிடம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்குத் தான் முதலிடம். தமிழ்நாட்டில் தஞ்சைக்குப் பிறகு தாமிரபரணி நதிக்கரையில் சிற்ப வேலைப்பாடு அதிகம் என்று கூறியுள்ளார்.
அப்படி ஒரு சிற்பக் கலை தோன்றியதால் மகனின் இரத்தத்தையே தந்தைப் பூமியில் சிந்த வைத்தான். அது பற்றிய ஒரு வரலாற்றைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
தாமிரபரணி நதிக்கரையில் மானா மங்கலம் என்னும் ஊர் உள்ளது. ஒரு காலத்தில் “மானா மங்கலம் சிற்ப வேலைப்பாடுகள் நீங்கலாக” என்று தான் கையெழுத்துப் போடுவார்கள் சிற்பிகள். அந்த அளவுக்கு மானமங்கலம் சிற்பம் மிகச்சிறப்பானதாகும்.
மானாமங்கலம் எங்கே உள்ளது என்பது நிறைய சிற்பிகளுக்குத் தெரியாது. ஆனால் ஏன் அப்படி ஒப்பந்தம் போடுகிறார்கள். குறிப்பாகச் சிற்பம் என்றாலே நமக்கு நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை நினைவுக்கு வருவது கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் தான். ஆகவே கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் நீங்கலாக என்று ஒப்பந்தம் எழுதாமல் மானா மங்கலம் சிற்ப வேலைப்பாடுகள் நீங்கலாக என்று ஒப்பந்தம் போடுகிறார்களே-? அந்த அளவுக்கு இந்தச் சிற்பத்தில் என்ன விசேஷம் உள்ளது. என்று கேள்வி கேட்கலாம் போலத்தோன்றும்.
சரி அந்த மானாமங்கலம் சிற்பத்தினை தேடி நாம் செல்வோம்.
தற்போது அது கிராமம் அல்ல. வயல் வெளிகளாக ஆகிவிட்டது. ஆனால் அங்குச் சிற்பியின் வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய கல்குடில் மட்டும் தற்போதும் மிகப்பிரமாண்டமாக காணப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த அற்புதக் கல்குடிலைப் பற்றி ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்றும் பேசப்படுகிறது. இந்த இடம் தற்போது அத்தாளநல்லூர் அருகில் வயல்வெளியில் உள்ளது. இந்த வரலாற்றை நான் ஏற்கனவே தலைத்தாமிரபரணி என்ற எனது நூலில்பேசியுள்ளேன். ஆனாலும் இவ்விடத்தில் பேசுவது நன்றாக இருக்கும் என்பதால் அந்த வரலாற்றை மீண்டும் உற்றுநோக்குகிறேன்.
இந்த வரலாறு பேசுவதற்கு முன்பு ஒரு புராண வரலாற்றை சற்று நோக்குவது சாலச்சிறந்தது.
ஒரு சமயம் ஒரிசாவில் சூரிய நாதர் கோவிலைப் பிரதிஷ்டை செய்ய நாரதர் பிரம்மனைக் கூப்பிடச் சென்றாராம். பிரம்மன் நிஷ்டையில் இருந்தாராம். அவரை எழுப்ப 1 நாள் காத்து இருந்தாராம் நாதர். பின்பு பூலோகம் வந்து பார்த்தபோது கட்டி வைத்த சூரியநாதர் கோவில் காணாமல் தரைமட்டமாக இருந்தது. என்ன இது கோவிலை எங்கே? என்று நாரதர் நினைத்து பார்த்த போதுதான் புரிந்தது. ஒரு நாள் நிஷ்டையில் பிரம்மன் இருந்த வேளையில் பூலோகத்தில் ஒரு ஆயிரம் ஆண்டு போய்விட்டது என்று.
அதன் பின்பு சூரியநாதர் கோவிலை நாரதர் கட்டிப் பிரம்மன் மூலம் அங்கு மூலஸ்தானங்களை பிரதிஷ்டை செய்ததாகக் கூறுவார்கள்.
தெய்வம் உருவாக்கிய கோவில்களே 1000-ஆம் வருடத்தில் காணாமல் போய்விடுகிறது. ஆனால் மனிதன் விட்டுவிட்டுப் போன சிறு அற்புதச் சிற்பக் கலைகள் மட்டும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவதில்லை என்பதற்கு இந்த மானா மங்கலம் சிற்பம் மிகப்பெரிய உதராணமாகும்.
முதலில் மானா மங்கலம் என்னும் ஊர்ப் பெயர்க் காரணத்தைப் பார்ப்போம். இது குறித்து திருப்புடை மருதூர் முருகையா பாண்டியன் கூறும் போது மங்கலம் என்பது முன்பொரு காலத்தில் அரசன் அந்தணர்களுக்கு தானம் செய்த இடமாகும். நல்லூர் என்பது கோவில்களுக்கு அரசன் தானம் இடமாகும்.
தாமிரபரணி நதிக்கரையில் அந்தணர்களுக்குத் தானம் செய்த இடம் மானா மங்கலம் என்றும் திருக்கோவிலுக்குத் தானம் செய்யப்பட்ட இடம் அத்தாள நல்லூர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள்.
இதே ஊரைப் பற்றிக் கூறும் போது ஊர்க்காடு பேச்சிமுத்து தேவர் மானா மங்கலம் என்றால் ராமாயணத்தில் மானாக மாரிச்சன் மாறி சீதாதேவியை ஏமாற்றி இறுதியில் ராமனிடம் மாட்டி உயிர் விட்ட இடம். ஆகவே தான் மானா மங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார். மங்கலம் என்றால் முடிவு என அர்த்தம். நாம் கூறும் வார்த்தை. மானான மாரிச்சன் கதையை முடித்த இடம் மானா மங்கலம் என்று கூறுகிறார்.
மானா மங்கலம் எங்கே இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
சாட்டப்பத்து கிராமத்துக்கு எதிர்புறம் தாமிரபரணி கரையில் மானா மங்கலம் உள்ளது. இவ்விடத்துக்கு வர அத்தாள நல்லூர்-, கொட்டாக்குறிச்சி, உப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வயல்வெளியே நடந்து தான் வர வேண்டும். சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த இந்த இடத்தைத் தேடி வயல் வழியாக சில நிமிடங்கள் வரப்பு வழியாக நடந்து சென்றோம்.
அந்த வேளையில் நான் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்தே ஒவ்வொரு ஊராக சென்று வந்த காலம் . தாமிரபரணி கரையில் ஊர்காடு சுடலை கோயில் அருகே நாங்கள் கொண்டு சென்ற வாடகை சைக்கிளை போட்டு விட்டு ஆற்றுக்குள் இறங்கி நடந்தோம். என்னோடு பேச்சி முத்து தேவரும், வீரவநல்லூர் கிருஷ்ணன் செட்டியாரும் நடந்தே வந்தனர். நல்ல பசியோடு தாமிரபரணி ஆற்றுதண்ணீரை குடித்தப்படியே நாங்கள் நடந்து வந்தோம். சில கிலோ மீட்டர் நடந்து வந்து எதிர்கரையில் ஏறினோம். அங்குதான் அந்த மானமங்கலம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்த அந்த கட்டிடம் இருந்தது.
இந்த கட்டிடத்துக்கு கர்ணபரம்பரை கதை ஒன்றும் கூறுகிறார்கள்.
முன்பொரு காலத்தில் சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். சிற்பக்கலையில் கை தேர்ந்த அவனுக்குத் தன்னைப் போல் யாரும் எதிர்காலத்தில் சிற்பம் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். தினமும் காலையிலேயே சிற்பி சாட்டுப்பத்து கிராமத்தில் கோவிலில் சிற்ப வேலையை ஆரம்பித்து விடுவான். இவனுக்கு மதியம் தோறும் உணவு கொண்டு வரும் பணியை இவரது மகனான 21 வயது இளைஞன் செய்து வந்தான்.
இளைஞனுக்கோ தந்தையைப் போல் சிற்பத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஒரு நாள் தந்தையிடம் “அய்யனே! எனக்கு சிற்பம் செய்ய ஆசையாக உள்ளது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்” என்று கேட்டான். அவ்வளவு தான் தந்தை சிற்பிக்குக் கோபம் மிகவும் பயங்கரமாக வந்து விட்டது.
“இந்தச் சிற்ப வேலைப்பாடு என்னோடு போகட்டும். என்னை மிஞ்சி இந்த வேலையை யாரும் செய்ய கூடாது. இதை யாருக்கும் நான் சொல்லிக் கொடுக்க மாட்டேன். மீறி என்னைத் தொடர்ந்து இந்தச் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தவர்களை உயிரோடு விட மாட்டேன்” என்று கர்ஜித்தான்.
மகன் ஆடியே போய் விட்டான். இருந்தாலும் ஆசைக்கு ஒரு அளவே கிடையாது அல்லவா?. எனவே தந்தைக்கு தெரியாமல் இந்த சிற்ப கலையை தான் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். தினமும் தந்தை செய்யும் சிற்பத்தை மகன் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சாட்டுப்பத்து கிராமத்துக்கு எதிர்புறம் ஆற்றங்கரையில் உள்ள கல் மண்டபத்தில் தானும் சிற்ப வேலைச் செய்ய ஆசைப்பட்டான்.
சாட்டுப்பத்து கிராமத்தில் உளி சத்தம் கேட்கும் நேரத்தில் உளியால் மகனும் அடித்து சிற்பம் செய்ய ஆரம்பித்தான். ஆண்டுகள் கடந்தது. தந்தை சிற்பி செய்த வேலைப்பாடுகளைக் காட்டிலும் மகன் சிற்பி செய்த வேலைப்பாடுகள் மிகப் பிரமாண்டமாக இருந்தது. ஒரு நாள் சாட்டுப்பத்தில் தந்தை சிற்பி உளியை அடிக்கும் நேரத்தில் உழியைத் திருப்பிவிட்டு விட்டு வாயில் போட்ட வெற்றிலையைத் துப்பினான்.
அந்தச் சமயம் மகனோ உளியைக் கொண்டு கல்லில் அடித்து விட்டான். அந்தச் சத்தம் தந்தைக்கு கேட்டு விட்டது. ஆ. கா எவனோ ஒருவன் நம்மைப் பின்பற்றிச் சிற்பம் செய்கிறானே என்று நினைத்தான். உடனே சிற்பம் செய்பவன் யார். அவன் எங்கிருந்து செய்கிறான். என்பதை அறிய அவனை தேடி சத்தம் கேட்ட திசையை நோக்கி நடந்தான்.
மறுசத்தம் வரும் வரை மகன் அமைதியாக இருந்தான். சத்தம் வரவில்லை. தந்தை நம்மை தேடி வருகிறான் என்று தெரியாமல் , “எப்படியும் சத்தம் வரும் அதன் பின் நமது வேலையை செய்யலாம்” எனக் காத்து இருந்தான். மகன் வடித்த சிற்பம் மிகப்பிரமாதமாக இருந்தது. கடைசல் என்பது மூலம் மரக்கட்டையைப் பல கோணத்தில் கடைசல் போடுவார்கள். ஆனால் கல்லில் கடைசல் போடுவது கடினமான வேலை. அந்த வேலையை மிகச்சிறப்பாக செய்திருந்தான் சிற்பியின் மகன். மானா மங்கலம் சிற்பத்தில் கல்லில் கடைசல் போட்டது, அருமையான சிற்ப வேலைப்பாடுகளை கொண்டதாக இருந்தது. அதனால் தான் பிற்காலத்தில் சிற்ப வேலை செய்பவர்கள் மானா மங்கலம் சிற்ப கலை நீங்கலாக என ஒப்பந்தும் செய்திருக்கிறார்கள்.
தந்தை சிற்பி கோபத்துடன் அலைந்து திரிந்தார். “எவனோ நம்மை பின் பற்றி சிற்பம் செய்கிறான். நாம் உழி தட்டும் போது அவனும் தட்டுகிறான். நாம் நிறுத்தும் போது அவனும் நிறுத்துகிறான். அவன் யார்?”. என தேடிக்கொண்டே ஆற்றின் மறுபுறம் வந்தான். அங்கே மிகப் பிரமாண்டமான நிலையில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கல் குடில் இருந்தது. தந்தை சிற்பி ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார். தான் செய்த சிற்ப வேலைப்பாடுகளை விடச் சிறப்பாக அந்த வேலைப்பாடுகள் இருந்தது. அவனுக்கு கர்வம் தலை விரித்தாடியாது. “நம்மை விட எவனோ இந்த சிற்பத்தினை மிகச்சிறப்பாக செய்திருக்கிறான். அவன் யார்? என்னை நகல் எடுக்கும் அவன் யாரு?”
அவருக்குக் கோபம் தலைக்கேறியது. “எவன் என்னைப் பின்பற்றி சிற்ப வேலைப்பாடுகள் செய்தது. அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்” என்று ஆவேசத்துடன் அவ்விடத்துக்கு வந்தான். அங்கே மகன் உளியைக் கையில் வைத்துக் கொண்டு அப்பா தட்டும் உளி சத்தத்துக்காக காத்து இருந்தான்.
மகனைப் பார்த்ததும் அவனுக்குக் கோபம் தணியவில்லை. நம் மகன் இப்படி செய்து இருக்கிறானே என சந்தோசமும் படவில்லை. “யாராக இருந்தாலும் எனக்கு என்ன-? என்னை விடத் திறமைசாலி இந்தப் பூமியில் வாழக்கூடாது” என்று தனது கையில் இருந்த உளியை எடுத்து மகனின் நடு உச்சியில் ஓங்கி குத்தினான். அப்பா என்று அலறியபடி மகன் சிற்பி பூமியில் விழுந்து துடிதுடித்தான்.
தரையில் சாய்ந்த மறுநிமிடம் மகன் உயிர் போனது. அனைவரின் மனதையும் உருகக செய்த இந்த கர்ண பரம்பரை கதை நடந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அத்தாள நல்லூர் அருகே உள்ளது என்பதை யாரும் அறிய முடியுமா? பார்கக வேண்டும் என்றால் தாமிரபரணி ஆற்று வழியாகவே , வயல் வெளி வழியாகவோ இவ்விடத்துக்கு சென்று வரலாம். மகன் உயிர் போய் விட்டது. ஆனால் மானா மங்கலம் என்ற அந்தக் கிராமத்தில் அவர் செதுக்கிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அந்த மண்டபம் மிகப் பிரமாண்டமாக தற்போதும் காணப்படுகிறது. தற்சமயம் அக்கிராமத்தில் வீடுகள் இல்லை. அனைத்தும் வயல் வெளியாக மாறிவிட்டது. ஆனாலும் கூட மண்டபம் மட்டும் கம்பீரமாய் அந்த ரத்த சாட்சியை சொல்லிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் சாட்டப்பத்து கிராமத்தில் தந்தை சிற்பி செய்த சிற்பங்கள் எங்கே உள்ளது என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
(பொருநை ரகசியத்தினை தேடி )


