தமிழ்நாடு முழுவதும் 90 இலட்சம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்று இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்று மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்றினை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (06.11.2023) துவக்கி வைத்தார்.
முகாமில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் 90 இலட்சம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் இன்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகள் ஒருங்கிணைந்து இந்த முகாமினை இன்றிலிருந்து 21 நாட்கள் (06.11.2023 முதல் 26.11.2023 வரை) நடத்துகின்றன.
கோமாரி நோயினால் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் பகுதியில் புண்கள் ஏற்படுகின்றன. மேலும் சினையில் இருக்கும் கன்றும் பாதிக்கப்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது. மேலும் பால் அளவும் குறைந்துவிடும். இந்த நிலையை மாற்றுவதற்காகவே கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த முகாமினை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் மீன்வளத்துறை மூலம் மீனவர்களின் நலனை காக்கின்ற அரசாக விளங்கி வருகிறது. மீன்குஞ்சுகள் இனப்பெருக்கத்தை அதிகரித்தல் போன்ற மீனவர்களை பாதுகாக்கின்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மீன்வளத்துறைக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு முதலமைச்சர் தந்து கொண்டிருக்கிறார்கள் என மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் எஸ்.சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் தூத்துக்குடி ஜான் சுபாஷ், தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாலசுப்பிரமணியன், முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், உமரிசங்கர் மற்றும் அலுவலர்கள், கால்நடை வளர்ப்போர் கலந்துகொண்டனர்.


