நாலுமாவடி புது வாழ்வு சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான புகை தெளிப்பான் இயந்திரங்கள் மோகன் சி.லாசரஸ் சுகாதாரப் பணி துணை இயக்குனர் பொற்செல்வனிடம் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்கம் சார்பில் பல்வேறு சமூகப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழக அரசுடன் இணைந்து சுகாதாரத் துறைக்கு டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்கான புகை தெளிப்பான் 7 இயந்திரங்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர். பொற்செல்வன் தலைமை வகித்தார். தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். பார்த்திபன், இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர்கள் ரத்தினராஜ், மருதநாயகம், செல்வின், மோசஸ் சம்பத், ராஜதுரை, பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூபாய் 5 லட்சம் மதிப்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கான புகை தெளிப்பான் 7 இயந்திரங்களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வனிடம் வழங்கினார். தென்திருப்பேரை வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்கான புகை தெளிப்பான் 7 இயந்திரங்களை 7 பிளாக்குகளுக்கு வழங்கி டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான பணியை மேற்கொள்வோம் என வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி, மூக்குப்பீறி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், சாலைப்புதூர் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார், உடையார்குளம் சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் , தென்திருப்பேரை சுகாதார ஆய்வாளர்கள் ஜான் நியுமன், சுனில் தர்ஷன், இயேசு விடுவிக்கிறார் ஊழிய மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


