கவிஞர் இளசை அருணா எட்டயபுரத்தில் பிறந்த கவிஞர். எழுத்தளார். எழுத்தாளர்களை உருவாக்கியவர். ஆசிரியர். பல்வேறு இலக்கிய திருவிழாவிற்கு அடிக்கோலியவர். தொகுப்பாசிரியர். சிறந்த ஓவியர் என பல்வேறு முகம் காட்டி வாழ்ந்த மறைந்த அற்புத மனிதர். மணிக்கொடி காலம் தொட்டு ஹைக்கூ காலம் வரை இலக்கியத் தொடர்புடைவராய் இருந்தவர். பாரதிக்கு அடுத்து ஜீவாவை வழிகாட்டியாக கொண்டவர். சாகித்திய அகாதமி எழுதியவர்கள் பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி, சோ தர்மன், நெல்லை மண்ணைச் சேர்ந்த தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை, வல்லிக் கண்ணன், கவிஞர் இ.ராஜ நாராயணன், தொ. மு.சி ரகுநாதன், கே.சி.எஸ் அருணாச்சலம் தி. க.சி., சாய்ராம், தோப்பில் முகமது மீரான், எழுத்தாளர் பூமணி, ஆர்.எஸ் ஜேக்கப், செல்வராஜ், பெருங்குளம் ஆ மாதவையா என இவரது நண்பர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அனைத்து பிரபல எழுத்தாளர்களையும் தொடர்பு கொண்டு அவர்களோடு இணைந்து இலக்கிய பணி யாற்றினார்கள்.
முது பெரும் எழுத்தாளர்களோடு தொடர்பில் இருந்தாலும் அடுத்த தலைமுறை கவிஞர்களின் படைப்புகளை பாராட்டி வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமைக்கு உடையவர். இவர் கரம் பிடித்து கல்வி பெற்றோர் பலர் கவிஞரானார்கள். இவர் நிழல் பட்டு பலர் எழுத்தாளராக உருவெடுத்தனர். எழுத்தாளர் ஜோல்னா திவாகர், பொன் வள்ளியப்பா, முத்தாலங்குறிச்சி காமராசு, கவிஞர் செண்பக காசி ,விளாத்திகுளம் கவிஞர் கோமதி சங்கர், முறப்பநாடு மகாலட்சுமி என எண்ணற்ற எழுத்தாளர்கள் வளர காரணமாக இருந்தவர். குறிப்பாக கரிசல் காட்டு கதைகள் என்ற இவரது சிறுகதை தொகுப்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ,சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வசித்த எழுத்தாளர்கள் சிறுகதை 32 யை வெளி வர செய்தார். இவர்களில் பலர் இப்போது நாடறிந்த நல்ல எழுத்தாளர்களாக உருவெடுத்துள்ளனர். இந்த நூலை எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் சுழவு ஒன்றில் வைத்து வெளியிட்டு பழமையை பறைசாற்றினார்.
மகாகவி பிறந்த எட்டயபுரத்தில் கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் தலைமையில் 50 கவிஞர்களைக் கொண்டு கவிதை வேள்வி ஒன்றை நடத்தினார். மகாகவி பாரதி நூற்றாண்டு நிகழ்வில் பெண்மையை போற்றும் விதமாக பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தலைமையில் முழுவதும் பெண்களையே பங்கு பெற செய்து கவிதை வேள்வி நடத்தினார்.
பாரதிதாசன் நூறாவது பிறந்தநாளில் கவிஞர் சுரதா தலைமையில் மேனாள் தமிழக சபாநாயகர் தமிழ்குடிமகன் முன்னிலையில் 108 கவிஞர்களைக் கொண்ட சிறப்பு கவிதை வேள்வி நடத்தினார். புதுமைப்பித்தனின் உலகம் அறியும் வண்ணம் நெல்லை மாநகரில் கவிஞர் மித்ரா வள்ளி மணாளன் தலைமையில் புதுமைப் பித்தனுக்கு கவிதாஞ்சலி நடந்தது. இதில் 100 கவிஞர்களை மேடையிடில் ஏற்றி கவிதை பாட ஏற்பாடு செய்தார். கடற்கரை நடுவே பௌர்ணமி நிலவில் வேப்பலோடையில் முழு நிலவு கவியரங்கம் நடத்தினார். அதோடு மட்டுமல்லாமல் தன் புதுமனை புகுவிழா, பணி நிறைவு விழா, மணி விழா, சதாபிசேகம் அனைத்துமே மிக வித்தியாசமாக நடந்தது.
உரையாசிரியர் கவிஞர் இளசை அருணா அவர்கள் சென்னை புதுவை தொலைக்காட்சியிலும், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி அகில இந்திய வானொலியிலும் ஆற்றிய உரை முன்னூறுக்கும் மேற்பட்டவை. பாரதி வ.உ.சி , தமிழ் அறிஞர்கள், கரிசல் இலக்கியவாதிகள் என பலரை பற்றி இவர் உரையாற்றியுள்ளார்.
தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர் இளசை அருணா பெற்ற பட்டங்கள் விருதுகள் பல பல. அவரும் பல எழுத்தாளர்களை அழைத்து விருதுளை வழங்கியுள்ளார். ஆனால் தமிழக அரசு மறந்த எழுத்தாளர்களும் இவரும் ஒன்று. தமிழக அரசோ, மத்திய அரசோ 80 வயது கடந்த ஒரு தமிழ்ஞானியை கண்டு விருது அளிக்காமல் இருந்தது வருந்தத்தக்கதாகும்.
ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அனைத்து நாடுகளிலும் உலக எழுத்தறிவு ஆண்டை அறிவித்த போது எடைக்கு எடை நாணயம் , வெங்காயம், வெல்லம் எனக் கொடுக்கும்போது நாம் ஏன் புத்தகம் வழங்கக்கூடாது என இளசை அருணா தலைமையில் திட்டமிட்டோம். ஒவ்வொருவரிடமிருந்து ஒரு புத்தகம் என்ற முறையில் தமிழகம் முழுவதிலும் 95 கிலோ எடையுள்ள புத்தகங்களை திரட்டினோம். அபிராமி ஆ. திருச்சிற்றம்பலம் அவர்கள் எடைக்கு நிகராக புத்தங்களை வழங்கி வாசகர் வட்டங்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கி புதுமை படைத்தார்.
ஓட்டப்பிடாரம் பஜாரில் உள்ள வ.உ.சி மார்பளவு சிலைக்கு நிழற்குடை அமைக்க இளைஞர்களைக் கொண்டு ஆளுக்கொரு ஒரு ரூபாய் விதம் தமிழக முழுவதிலும் இருந்து பெற்றார். சிதம்பரனாருக்கு மணிமண்டபம் அமைத்ததோடு செருப்பு தைக்கும் தொழிலாளியை கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து புதுமை படைத்தவர்.
பேனாவையும், தூரிகைகளையும் தனது ஆயுதங்களாகக் கொண்டு ஒவ்வொரு மனதையும் மயக்கியவர் இளசை அருணா. இவர் ஒவ்வொருவருக்கு கடிதம் எழுதுவதே சிறப்பானதாக இருக்கும். அந்த கடிதங்கள் அனைத்தும் ஓவியமாக விளங்கும். இவரது ஒவிய கடிதம் இவரது நட்பில் இருந்தவர்கள் வீட்டில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இளசை அருணாவின் முத்துவிழா நெல்லை வண்ணார் பேட்டையில் தமிழ் கடல் நெல்லை கண்ணன் தலைமையில் நடந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். தங்களுடைய படைப்புகளை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து வெளியிட்டனர். தனது தள்ளாத 80 வது வயதிலும் அவர் எழுதி வெளியிட்ட “நாட்டுத் திலகமும் பாட்டுத் திலகமும்” “வ. உ.சி பாரதி இலக்கிய ஒப்பீடு”. என்ற நூல்கள் அவரது திறமையை பறைசாற்றியது.
கரிசல் இலக்கியம் நூல் வெளியீடு வரலாற்றுச் சிறப்புடையது. பாரம்பரிய முறைப்படி முற்றத்தில் நெல் கனிகள், மஞ்சள் வைத்து தமிழ் கலாச்சாரப்படி நடத்தப்பெற்றது. கம்பங்களியும், மோரும் கருப்பட்டியும் நம்ம ஊர் சிறப்பு. இதன் மூலம் தான் வருகை புரிந்தோருக்கு சிற்றுண்டி வழங்கப்படும். புதுமை இருக்கும் இடத்தில் எல்லாம் அருணாவின் அழகியல் இருக்கும்.
பாரதி, வ உ சி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், ஜீவா என பல தலைவர்களை தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்ட கவிஞர் இளசை அருணா அவர்களுக்கு நீண்ட நெடிய மாணவர்கள் அணிவகுத்து நிற்பது பெருஞ்சிறப்பாகும். இவரது சிஷ்யர் ஜோல்னா ஜவகர் தமது ஆசிரியரைப் போல அழகாக எழுதுவதோடு, தனது ஆசான் சிறப்புகளை பலரைப் பேச வைத்து என் ஆசான் என்ற நூலை சதாபிசேக விழாவில் படைத்தார். ஜோல்னா ஜவகர் முயற்சியில் இளசை அருணா கவிதைகள் பல இடங்களில் மேற்கோள் காட்டி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தள்ளாத வயதில் இருந்தாலும் இளசை அருணா கட்டளையை ஏற்று ஜோல்னா ஜவகர் தமிழ்நாடு முழுவதும் சென்று வ.உ.சி 150 ஆண்டு விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் உதவியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
இலக்கியச் சூரியன் இளசை அருணாவின் உதயம் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் அவரின் வளர்ச்சி தமிழ் பணி பணிபுரிந்த ஒட்டப்பிடாரத்தில் நடந்தது. ஓய்வு பகுதி கிருஷ்ணகிரியிலும் அமர்ந்த படியே தனது சிஷ்யர்களை கொண்டு தமிழ்ப்பணி செய்ததாகும்.
இவரது இறுதி காலம் கூட மகாகவி போல சென்னையில் அமரத்துவம் பெற்றது. பேரறிஞரின் மறைவு தமிழகத்தை உலுக்காமலும் மிகச் சிலருடன் அமைதியாக நடந்தது. இதனால் பாரதி மறுபடியும் வாழ்ந்து மறைந்ததை உணர்த்துகிறது. தமிழக கவிஞர்கள் பலர் வாழும் போது முழு அங்கீகாரம் பெறவில்லை. ஆனால் மறைந்த பிறகு அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
ஆனால் இளசை அருணாவிற்கு அந்த முயற்சி குறைவாக உள்ளது. முற்காலத்து எழுத்தாளர்களை நெஞ்சில் நிறுத்தி, இடைக்கால எழுத்தாளர்களோடு வண்ண எழுத்துக்களால் வளைத்துப் போட்டதோடு வருங்கால கவிஞருக்கு வழிகாட்டியாய் அமைந்த ஒரு கவிஞனின் பேனாவிற்கு தலை வணங்குவோம். தமிழுக்காக பாடுபட்ட அவரது குடும்பத்தை பாதுகாப்போம்.
இவரது நல்ல நூல்களை நாட்டுடமையாக்க அரசை வேண்டுவோம். இளசை அருணாவுக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கையை வைப்போம்.


