திருமணம்.
நல்லநாள் பார்க்கவேண்டும். முகூர்த்த பட்டு வாங்க வேண்டும். ஊர் மக்களுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும். முகூர்த்தகால் நட்டவேண்டும். மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு. என ஒவ்வொரு சடங்குகளை நடத்த வேண்டும். உற்றோரும் மற்றொரும் ஒன்றாய் கூட அந்த திருமணம் மிகச்சிறப்பாக நடக்க வேண்டும்.
ஆனால் இங்கே என்ன நடக்க போகிறது என்பது தெரியாமலேயே பெண்மாப்பிள்ளை இருவரையும் அழைத்து ஒரே நிமிடத்தில் தாலியை கட்டி அனுப்பி வைத்து விட்டார்கள்.
அதைப்பற்றியெல்லாம் காளியும் செல்வியும் கவலைப்படவில்லை. ஆனால் நாட்டாமை இவர்களை நடத்திய விதம் தான் பிடிக்க வில்லை. அதோடு மட்டுமல்லாமல் இவர்களை ஒரு குற்றவாளிபோல சித்தரித்தது அவர்களுக்கு பிடிக்கவே இல்லை.
தாலி கட்டியவுடன் செல்வியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான் காளி.
செல்வியால் பேசவே இயலவில்லை.
“என்ன நடக்குது. இங்கே” என அவளுக்கு புரியவேயில்லை.
காளி நிதானமாக சொன்னான். “ஒண்ணுமில்லை செல்வி நம்மள திசை திருப்ப பிளான் போடுறாங்க”.
“கல்யாணம் பண்ணி வச்சா நாம பயந்திருவோமோ. திரும்பும் தைரியமாக சேர்ந்து செயல்பட போறோம். இதில எப்படி நாட்டாமைக்கு லாபம் கிடைக்கும்”. செல்வி அப்பாவியாக கேட்டாள்.
“அது தான் எனக்கு புரியலை. ஆனா ஏதோ சதி நடக்கு. அது மட்டும்தான் எனக்கு நல்லா தெரியுது”.
இருவரும அமைதியாக இருந்தார்கள். காளி வீட்டை நோக்கி சென்று வாசலில் நின்றார்கள்.
கதவை ஆட்டினான். பூட்டுகூட இல்லை திறந்து கொண்டது. உள்ளே போய் லைட்டை போட்டான் . எரியவில்லை. எப்படி எரியும். கடந்த மாதம் கரண்ட் பில் கட்டவில்லை. தாய் தந்தையர் இல்லாத காளி எப்போது ஒரு நாள்தான் வீட்டுக்கு வருகிறான். இன்று காலை வந்தவன் சாப்பிட சாதம் தயார் செய்தான். அதன் பின் அவசரமாக கிளம்பி விட்டான். வீட்டில் க்ரண்ட் இருக்கிறதா? இல்லையா? என்பதை சரியாக பார்க்க வில்லை. ஆனால் நேற்று இரவு மின்சாரம் இருந்ததே.
யோசிக்கும் போது அருகில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான். “ஏடே நீ கரண்ட் பில் கட்டலைன்னு இன்னைக்குதான் வொயர் மேன் வந்து கரண்டை புடுங்கிட்டு போறாரு” என்றான்.
சரி நாளைக்குபோய் கரண்ட் பில்லை கட்டி சரி பண்ணனும். வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
அந்த ஓட்டு வீட்டில் மேலே சில பொத்தல்கள் இருந்தன. அதன் வழியே நிலவு வெளிச்சம் வந்தது. எனவே வீட்டுக்குள் ஆங்காங்கே வெளிச்சம் தெரிந்தது.
வீட்டுக்குள் கட்டில் கூட இல்லை. ஓரிடத்தில் ஓலைப்பாய் இருந்தது. அதை விரித்தான் காளி. “செல்வி இதுல உட்கார். ஏதாவது சாப்பாடு இருக்கான்னு பாக்கிறேன்” என்றான்.
“ஒன்னும் வேண்டாம். பார்த்துக்கலாம்”. செல்வி அவனிடம் பேசினாள்.
செல்வியின் அம்மா உள்ளே ஓடியே வந்தாள். “என்ன வேணும் நல்ல பாய் கொண்டு வரட்டுமா? சாப்பிட்டீயளா? சாப்பாடு கொண்டு வரட்டுமா?” என கேட்டாள். செல்வி அவளை முறைத்து பார்த்தாள்.
“யம்மா. எங்கள இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணுமுன்னு நினைச்சா எங் கிட்டே சொல்லியிருந்தா. நாமளே காளிக்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கலாமே. இப்படி எங்களை பஞ்சாயத்துல இழுத்துக்கொண்டு போய் விட்டுட்டீயே”.
தலை கவிழ்ந்து நின்றாள் அந்த தாய்.
ஏதோ பிரச்சனை ஓடுகிறது. என்ன பிரச்சனை ஒடுகிறது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.
செல்வி அவளின் தாயை விரட்டினாள். “போம்மா நீ நினைச்சது நடந்துட்டுல்லா போய் வீட்டுல போய் படுத்து நல்லா தூங்கு. எங்களை நிம்மதியா இருக்க உடு”.
எழுந்தாள் அந்த தாய். அவள் நாட்டாமை விரித்த வலையில் விழுந்து விட்டாள். காளி எவ்வளவு நல்ல பையன். அவனை பற்றி புரியாமல் இப்படி செய்து விட்டேனே என மனம் நொந்து போனாள்.
அடுத்த கட்டம் என்ன செய்வது என்றே தெரியாமல் அந்த தாய் அழுத படியே வெளியே கிளம்பினாள். அவள் மனதும் சொன்னது. “காளி நல்ல பையன் . நான் சொன்னாலே கேட்பான். எதுக்கு இந்த பயலுவ சொல்ல கேட்டுட்டு ஊர் கூட்டத்துக்கு போயிட்டோம்”. வருத்தப்பட்டாள். அந்த வருத்தம் அவளுக்கு அழுகையாக மாறியது. கதறி அழுதபடியே அவள் வீட்டுக்கு ஓடினாள். அவளாள் அப்பாவிகள் இருவர் முகத்திலும் விழிக்க முடியவில்லை.
காளி அடுப்பங்கரையை பார்த்தான். கஞ்சி இருந்தது. அதை கொண்டு வந்தான். இரண்டு வெங்காயம், இரண்டு மிளகாய் இருந்தது. நல்ல கல் உப்பு இருந்தது. மூன்று கிண்ணத்தில் அதை எடுத்து வைத்துக்கொண்டான்.
ஒரே கலயத்தில் இருந்த கஞ்சியையும் கொண்டு வந்தான். இருவரும் ஓரே கலயத்தில் உள்ள கஞ்சியை மாறி மாறி குடித்தார்கள். சுவைக்காக வெங்காயத்தையும் மிளகாயையு-ம் கடிததார்கள்.
வயிறு நிரம்பியது. ஆனால் மனது நிரம்பவில்லை.
இருவரும் அந்த ஒலைப்பாயில் படுத்தார்கள்.
இருவரும் சிறு வயதினர்தான். இவர்களுக்கும் இளமை ஊஞ்சலாடியதுதான். ஆனால் மனது ஊஞ்சாலாட வில்லை.
காளி சொன்னான்.
“செல்வி. இன்று நமக்கு கல்யாணம் முடிந்துவிட்டது. ஆனால் நமக்கு உண்மையான கல்யாணம் தாமிரபரணி மணல் திருட்டை முடிவுக்கு கொண்டு வந்த பிறகுதான்”.
“ஆமாம் நானும் உன் கிட்டே சொல்லணுமுன்னு நினைச்சேன்”. இதுதான் உண்மையான ஜோடி. இருவரின் எண்ணமும் ஒன்றுபோலவே தோன்றுகிறது.
“நம்மை நம்பி உயிரை கொடுத்துட்டான் ரகு அவன் பிண அரங்கில இருக்கான். இந்த சமயத்தில நாம ஒண்ணா சேந்தா அதை விட மோசமானது உலகத்தில எதுவுமே இல்லை”. செல்வி ஆணித்தரமாக சொன்னாள்.
“ம். இந்த மணல் திருட்டை ஒரு முடிவுக்கு கொண்டு வரணும். அதுவரைக்கும் நாம கவனமாத்தான் இருக்கணும்”. மோட்டு ஓட்டை பார்த்துக்கொண்டே பேசினான்.
“என்ன செய்யலாம்”. செல்வி அவனிடம் கேட்டாள்.
“நாம வெளி உலககுக்குத்தான் புருசன் பொண்டாட்டி. ஆனால் நாம ஒண்ணா சேரக்கூடாது”.
“சரி”. இருவரும் ஒருவரை ஒருவர் கையில் சத்தியம் செய்தனர். இவர்களுக்கு சாட்சியாக நிலவு வந்து எட்டிப்பார்த்தது.
அப்படியே அந்த ஒலைப்பாயில் தூங்கிப்போனார்கள்.
மறுநாள் விடிந்தது.
ஊர் கூட்டம் முழுவதும் காளி வீட்டு முன்பு நின்ற்£ர்கள்.
ரகுவின் அப்பா காட்டு கத்தல் கததிக்கொண்டிருந்தார்.
“என் பையனை கொன்னுபுட்டு, இவன் சொகுசா புதுப்பெண்டாட்டியை கட்டிக்கிட்டு தூங்குதான். கேட்க யாருமே இல்லையா?”.
“ஏலே உன்னாலத்தான் ரகு செத்து போனான்”. இது மற்றொருவரின் குரல்.
“ரகுவை கொலை பண்ணுனது யாருன்னு இந்த செத்த பயலுக்கு தெரியும். இவன் மூச்சை விட மாட்டுக்கான். இவனை பிடிச்சு நாலு சாத்து சாத்துனா எல்லாம் தெரிஞ்சிடும்”. இது இன்னொருவரின் குரல்.
“இவன் நம்மளை எல்லாத்தையும் ஏமாத்துதான்”.
“பாரு. இவுக இரண்டு பேரும் திட்டம் போட்டுத்தான் செயல்பட்டு இருக்காவ. இல்லாட்டி நாட்டாமை கூப்பிட்டு தாலிக்கட்ட சொன்னா உடனே தாலி கட்டுறதா?. பதில் சொல்ல வேண்டாம். நண்பன் அடக்கம் முடியட்டும். பொறவு பாத்துக்கிடலாமுன்னு தானே சொல்லணும். ஆனால் பாவி பய உடனே தாலிகட்டிட்டான்”.
“இது என்னடே அர்த்தம்”.
அப்போது போலீஸ் ஜீப் வந்தது.
அதில் இருந்து ஏட்டையா இறங்கினார்.
“இரண்டு பேரும் வாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு.”
“என்ன சார்?”.
“ரகு கொலையில உங்க இரண்டு பேருமேலேயும் சந்தேகம் இருக்கு . அதான் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உங்களை விசாரிக்க கூட்டிட்டு வரச்சொல்லியிருக்காரு”.
காளிக்கும் செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஏதோ ஒரு பெரிய பின்னல் நமது மேல் பின்னப்படுகிறது. ஏதனால். ஏன்?.
“ஸார். சங்கரலிங்கம் எஸ்.ஏ ஸார் எங்க இருக்காங்க” காளி கேட்டான்.
“அவரை நேற்று மாலையிலேயே மாற்றிட்டாங்க. அதுவும் சென்னைக்கு. நேத்தே இரயில் ஏறி மெட்ராஸ் போயிட்டாரு”.
“என்ன ஸார் சொல்றிங்க”.
“ஆமாம் . அதான் சர்கிள் இன்ஸ்பெக்டர் உங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு வர ஆள் அனுப்பி இருக்காரு”.
வெளியே கிளம்பினான்.
மாரியப்பனை தேடினான். ஆனால் மாரியப்பனை காணவில்லை.
ஊர் மக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் காளி. “இங்க பாருங்க எம்மேலே வேணுமுன்னே திட்டம் போட்டு பழி வாங்குறாங்க. நம்ம சப் இன்ஸ்பெக்டரையும் மாற்றிட்டாங்க. நம்ம மணல் அள்ள வந்தவங்க சாதாரணமான ஆளுன்னு நினைச்சோம். ஆனால் அவர்கள் சாதரண மானவங்க இல்லைங்கறதை அடிக்கடி நிருபிச்சிக்கிட்டு இருக்காங்க. அதுல மாட்டிக்கிடாதீங்க ப்ளீஸ்”.
சிரித்தார் ஏட்டையா. “ஏடே நீ அப்படியே கருவாயூர் கருவாயன், இல்லாட்டி மலையூர் மம்பெட்டியான். உடனே நீ சொன்னவுடனே மக்கள் சொல்ல. நமக்கு எதுக்குவே வம்பு ன்னு எல்லாரும் ஓடி போயிருவா. நீயும் போயிருந்தா உனக்கு எதுக்கு பிரச்சனை வரப்போவுது”.
புரிந்தது காளிக்கு நம்மை சுற்றி பெரிய பின்னல் போடப்பட்டுள்ளது.
“ஏடே பேசமா கல்யாணம் முடிஞ்சிட்டு, போலீஸ் விசாரணை முடிஞ்சிட்டேன்னா. அப்படியே இரண்டு பேரும் மாஞ்சோலைக்கு ஓடிப்போங்க. அங்கே போய் வயித்த கழுவ வழியை பாருங்க” ஏட்டையா சொல்லும் போதே காளிக்கு வேதனையாக இருந்தது. “சுதந்திர இந்தியாவில் யாரு எங்கே வாழணுமுன்னு நாம முடிவு பண்ண முடியலையே”.
முதல் நாள் பார்த்த மக்கள் இன்றைக்கு இல்லை. அவர்கள் நடை உடையெல்லாம் மாறி இருந்தது. இவர்கள் இருவரையும் அவர்கள் எதிரியாக பார்த்தனர்.
அப்போது பொன்னையா அங்கே வந்தார். “என்ன ஏட்டையா எப்போ பாடியை வாங்க வரணும். மழை வர்ற மாரி இருக்கு . சீக்கிரம் காரியத்தை முடிச்சிட்டு மத்த காரியத்தை பாக்கணும்”. என்றார்.
புரிந்து விட்டது காளி வெளியே சுதந்திரமாக இருந்தால் ரகு பாடியை வாங்க முடியாது. அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.
காளிக்கும் செல்விக்கும் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்புவது என்பது தெரியவில்லை. போலீஸ் காரர்கள் விரட்டினார்கள். “ஏறுங்க சீக்கிரம். இங்க உங்களை விட்டுட்டு போனா. இன்னும் இரண்டு கொலை விழுந்திரும் போல”.
“யாரை ஏட்டையா யாரு கொலை செய்வாங்க” காளி கோபமாக கேட்டான்.
“ம். உங்க ரெண்டு பேரையும் ஊர் மக்கள் கொலை செய்ய தயரா இருக்காங்க”
அதிர்ந்தே போய் விட்டார்கள் இருவரும்.
லத்தியை தூக்கி கொண்டு வந்து இருவரையும் அடிப்பது போல கையை ஓங்கினார் ஏட்டையா.
இனிமேல் இங்கே நிற்பதில் அர்த்தம் இல்லை.
“சார்வாள் நாங்க வாறோம். எங்க மேலே கையை வைக்க வேண்டாம்”.
காளி அவரை தடுத்தான். செல்வியின் தோள் மீது கை போட்டான். அவளை அப்படி அணைத்தப்படியே வந்து ஜீப்பில் ஏறினான்.
மிகப்பெரிய வலை விரிக்கப்பட்டு விட்டது. ஒரே நாள் ராத்திரியில்.
ஜீப் நகர துவங்கியது.
ஒரே நாளில் சப் இன்ஸ்பெக்டர் மாற்றம்.
இரவோடு இரவாக நமக்கு திருமணம்.
காலையில் எதிர்ப்பு தெரிவித்து நமதுவீட்டை மக்கள் முற்றுகையிடுகிறார்கள்.
என்ன நடக்குது இங்கே
யோசித்தான். உடனே நமது தொண்டு நிறுவன இயக்குனருக்கு தகவல்தெரிவிக்க வேண்டும்.
எப்படி தெரிவிக்க. லட்டர் போட வேண்டும். இல்லையென்றால் சேரன்மாகதேவிக்கு போகவேண்டும். ஆனால் போலீஸ் காரர்கள் விடுவதாக தெரியவில்லை.
ஆனால் செல்வியின் கையை இருக்க பிடித்துக் கொண்டான் காளி. எனக்கு துணை இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் நான் சாமாளிப்பேன் .
செல்வியின் முகத்தினை பார்த்தாள். அவளும் அவன் கண் அசைவுக்கு சரி என உத்தரவு கொடுத்தாள்.
இருவரும் விரிக்கப்பட்ட பெரிய வலையில் இருந்து தப்பிக்க தயாரானார்கள்.
******
போலிஸ் நிலையம் உள்ளே ஜீப் சென்றது.
அதற்குள் அங்கே தொண்டு நிறுவன இயக்குனர் தாணுலிங்கம வந்து நின்றார். அவருடன் வக்கீலும் வந்திருந்தார்.
செல்வியை¬யும் காளியையும் கைதிபோல கொண்டு வரும் போலீஸ் இடம் சண்டையிட்டனர்.
“ஸார் அவுக இரண்டு பேரும் என்னோட ஸ்டாப்”.
“ம். உங்க ஸ்டாப்க்கு நல்ல ட்டிரையினிங்க கொடுத்து இருக்கீரு. நேத்து ராத்திரியே ரெண்டு பேரும் ஜோடி சேந்துட்டாங்க”. கேலி செய்தார் ஏட்டு.
தாணுலிங்கம் செல்வி கழுத்தை பார்த்தார். அங்கே மஞ்சள் கயிரு இருந்தது.
காளியிடம் என்ன வென்று கேட்டார்.
காளி பதில் சொல்லும் முன்பே, “உள்ளே சர்க்கிள் அய்யா இருக்காரு வாங்க அங்கே போய் பேசுங்க”. என்று இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார் ஏட்டையா.
சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் “அய்யா இங்க பாருங்க எங்க ஸ்டாப் மேலே எந்த குத்தமும் இருக்காது நான் கியாராண்டி”. என்று தாணுலிங்கம் தன் வக்கீலோடு வந்து வாதாடினார்.
அதற்குள் சமூக சேவகர் நயினார் குலசேகரன் அய்யாவும் வந்து சேர்ந்தார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, ஜோல்னா பை. நீண்ட தாடியுடன் ஒரு ஞானியை போல இருந்தார். எங்கே தவறு நடந்தாலும் தட்டி கேட்பவர். அதுவும் இதுபோன்ற அபலைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் உடனே அங்கே சென்று விடுவார். கையில் ஒரு பழைய சைக்கிள் தான் வைத்திருப்பார். அதில் தனது ஊரில் இருந்து வந்து சேர்ந்து விட்டார். அவர் எப்போதுமே ஒன்மேன் ஆர்மிதான். யாரையும் கூட்டுச்சேர்க்க மாட்டார்.
“சார். அவங்க இரண்டு பேரையும் வெளியே விடலைன்னா. நான் இங்கே இப்பவே பஸ் மறியல் செய்யப்போறேன். மணல் கடத்தை தடுக்க முயற்சி செய்யவங்களுக்கு தண்டனை கொடுக்கீங்க. அதை என்னால ஏத்துக்கவே முடியாது” என்றார்.
இன்ஸ்பெக்டர் யோசித்தார். பிரச்சனை பெரிதாகிறது. தற்போது இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
“இங்க பாருங்க. எங்களுக்கு கம்ளயின்ட் வந்துருக்கு விசாரிக்க கூட்டிட்டு வந்திருக்கோம். இப்படி பெரிய ஆளுக வந்து அவர்களுக்கு சப்போர்ட் செய்யுறீங்க. சரி. எப்படியோ போங்க. இவுக இரண்டு பேரையும் கூட்டிட்டு போங்க .ஆனால் அவங்க இந்த ஊருல இருக்க கூடாது. எங்கயாவது கூட்டிட்டு போங்க. பெரியவரை நீரும், இந்த தொண்டு நிறுவன இயக்குனரும் கையெழுத்து போட்டுடடு கூட்டிட்டு போங்க . நாங்க எப்போ கூப்பிட்டாலும் அவுக இரண்டு பேரையும் கூட்டிட்டு வரணும். ஆமாம்”. இன்ஸ்பெக்டர் பேசி முடித்தார். அவருக்கு எப்படியாவது இவர்கள் இருவரையும் இங்கிருந்து விரட்டி விட வேண்டும்.
“சரி அய்யா”. இருவரும் கையெழுத்து போட்டனர்.
அதன் பிறகு காளியையும் செல்வியையும் கூடடிக்கொண்டு பாபநாசம் நோக்கி கிளம்பினர்.
காளிக்கு செல்விக்கு பேசவே வாய்ப்பில்லை. வெளியே வந்தவுடன் திருநெல்வேலிக்கு பஸ். அதில் ஏறி அங்கிருந்து பாபநாசம் பஸ்ஸில் ஏறினார்கள். மதியம் 1 மணிக்கு பாபநாசம் வந்து இறங்கி விட்டனர்.
உடன் தாணுலிங்கமும், நயினார் குலசேகரன் தாத்தாவும் உடனே வந்தார்கள். தாத்தா சைக்கிளை நடராஜன் சைக்கிள் கடையில் போட்டு விட்டு வந்துவிட்டார்.
காளித்தான் கேட்டான். “தாத்தா நாங்க என்ன செஞ்-சோம் என்ன நடக்கு. எங்களுக்கு எப்படி திருமணம் நடந்தது எதையுமே இரண்டுபேரும் கேட்கலையே”.
இருவரும் சிரித்தனர். “உங்கள் மேலே நிச்சயம் தப்பு இருக்காது. உங்களை பகடை காயாக பயன்படுத்துறாங்க. இந்த நேரம் நாம அவங்க கூட மோத முடியாது. நமக்கு நிறைய வேலை இருக்கு. அதனால அந்த வேலையை செய்வோம். பொறவு பார்த்துக்கலாம்”.
தாணுலிங்கம். பேசினார். தாத்தாவும் அதற்காக தலையாட்டினார்.
இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
அந்த வேளையை பயன்படுத்தினர் நாட்டாமை குழுவினர். ரகு பாடியை ஹைகிரவுண்டில் இருந்து எடுத்து வந்த அடக்கம் செய்தனர். மறுநாள். ஆற்றுக்குள் மணல் அள்ள ஆரம் பித்து விட்டனர்.
போஸ்ட்மாஸ்டர் ரிப்போர்ட் படி குடித்து விட்டு காட்டுக்குள் நடந்த சென்ற ரகு தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து இறந்து விட்டான் என வழக்கை முடித்தனர். ரகுவின் அப்பா முழுநேர குடிகாரர் ஆனார். அவருக்கு என்று தனி சப்ளை நடந்தது.
ஊர் மக்களுக்கு தினமும் வேலை கிடைத்தது. எனவே சந்தோசமாக மணலை அள்ளி லாரியில் போட்டனர். மக்கள் பலத்துடன் எவ்வளவு மணலை தாமிரபரணி ஆற்றில் அள்ள முடியுமோ அந்த அளவுக்கு அள்ளினார்கள். ஆனால் அப்போது கூட நதியை மொட்டையடிக்க வில்லை.
ஆனால் பிற்காலத்தில் அரசே ராட்சத இயந்திரங்கள் கொண்டு ஆற்று மணலை அள்ளப்போகிறார்கள். அதற்கு அடித்தளம் தான் இந்த பணி என்பது அப்போது அந்த மக்களுக்கு தெரியாமலேயே இருந்தது.
ஆனால் ஊரை மறக்க முடியாமல், ரகுவையும் மறக்க முடியாமல் செல்வியும் காளியும் தொண்டு நிறுவன பணி மூலமாக ஏழை மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண ஊர் ஊராக சென்றனர்.
அப்போது தான் ஒரு ஆய்வாளர் தாமிரபரணியை ஆய்வு செய்வோம் என்று இவர்களை அழைத்தார். அந்த ஆய்வில் தாமிரபரணி அழியத்தொடங்குகிறது என்பதை கண்டுபிடிக்க போகிறார்கள் என்பது குறித்து அப்போது யாருக்குமே புரியவில்லை.
( தொடர்ந்து பயணிப்போம்)
தொடர்பானவை
October 4, 2024