தூத்துக்குடி மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கனரக லாரிகள் நகருக்குள் செல்வதற்கு குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார்.

எஸ்பி உத்தரவின் பேரில், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இந்தத் தணிக்கையின் போது, நேரக் கட்டுப்பாட்டை மீறி நகருக்குள் இயக்கப்பட்ட 9 கனரக லாரிகள் பிடிக்கப்பட்டன.

மேலும் அந்த வாகனங்களின் ஓட்டுநர்களிடம் இருந்து மொத்தம் ரூ.45,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.