தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.415 மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06.10.2025) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு ரூ. 415 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 72 வீடுகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதனை தொடர்ந்து, ரூ. 12 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், வட்டாட்சியர்கள் சு.சிவகுமார் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) , சுபா (எட்டயபுரம்), வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


