தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் பனைமரங்கள் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை கருங்குளம் பஜார் சத்திரம் கீழ்பகுதியில் உள்ள பனைமரத் தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த திருநெல்வேலி மாவட்ட பாளையங்கோட்டை தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமானது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பனை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


