மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி ஆட்சியருக்கு இன்று விருது வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் தமிழகத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு விருதுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். செந்தில்ராஜூம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் மனித உரிமைகளை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது ஆகியவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த விருதை வழங்க உள்ளார்.


