செய்துங்கநல்லூர் சோமசுந்தர விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் அமைந்துள்ளது சோமசுந்தர விநாயகர் கோவில். இந்த கோவிலில் 17 வருடங்களுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடந்தது.
இதற்காக கடந்த 4ம் தேதி காலை 7 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், தேவதா அனுக்சை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாகனம், மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை கோ பூஜையுடன் தொடங்கியது.
மாலை 5 மணி அளவில் தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சாந்தியுடன் முதல் யாகசாலை பூஜை நடந்தது. 05 ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு மூன்றாம் யாகசாலை பூஜையும், பூர்ணாகுதியுடன் தீபாராதனையும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 4 மணி அளவில் மங்கள இசையுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கடம் எழுந்தருளியது. அதன்பின்னர் அருள்மிகு சோமசுந்தர விநாயகர், விமானம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.


