480 ஆண்டுக்கு முற்பட்ட ‘முன்னீர்பள்ளம் செப்பேடு’ கண்டுபிடிப்பு பற்றி, திருநெல்வேலி வரலாற்று பண்பாடு கள ஆய்வு மைய இயக்குநர் மாரியப்பன் இசக்கி கூறியதாவது:
பாளையங்கோட்டை அருகே உள்ள கிராமம் கீழமுன்னீர்பள்ளம், இந்த ஊர் ஜெயசிம்ம நாட்டின் ஒரு பகுதியாக இருந்து சங்கரன் நாராயணன் என்பவரால் ஆளப்பட்டு வந்தது.
இதனை பூதல வீர உண்ணிக் கேரள வர்மன் வென்றான். இந்தப் போர் சகாப்தம் ஆண்டு 1466 ஆம் ஆண்டு. கொல்லம் ஆண்டு 720 என்று குறிப்பிடப்பட்டுள்ளது (அதாவது கிபி 1544 ஆம் ஆண்டு). இந்தப் போர் நடைபெற்றது தொடர்பான செப்பேடு ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
கல்வெட்டு தமிழ் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. இதில், ‘ஊரினை கீழ்க்கள கூற்றத்து வல்லபன்மங்கலத்தின் மேல் பிடாகை முன்னீர்பள்ளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஊர் 90 பங்குகளாக பிரிக்கப்பட்டு பிரம்ம தேயமாக அந்தணர்களுக்கு தாளம் கொடுக்கப்பட்டதை செப்பேடு குறிப்பிடுகிறது. மேலும் ஊரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கும், பெருங்கருணை ஈஸ்வரமுடையார் கோவிலுக்கும் பங்கும். மனையும் கொடுக்கப்பட்டன. கூடவே வேதவிருத்தி, புராண விருத்தி ஆகியவற்றிற்கும் பங்குகளும், மனைகளும் அளிக்கப்பட்டுள்ளன
இதில் திருநெல்வேலி வட்டாரம் அடங்கிய பெரும்பகுதி கீழ்க்களக்கூற்றம் என்றும், பாளையங்கோட்டை வல்லபன் மங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. இதற்கு மேற்புறத்தில் அமைந்துள்ள’ உளர் முன்னீர்பள்ளம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பூதல வீரனின் கல்வெட்டுகள் அம்பாசமுத்திரம், களக்காடு. பாளையங்கோட்டை பகுதிகளில் காணப்படுகின்றன. செப்பேட்டின் அனைத்து பகுதிகளும் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் 90 பேர் பெயர்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
தற்பொழுது செப்பேடு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊரச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வசம் உள்ளது. செப்பேடு குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


