தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 வருடமாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த அகழாய்வு பணிகள் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக தற்போது வரை 18 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக்கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள ஒரு செங்கல் 25 செண்டி மீட்டர் நீளமும், 16 செண்டி மீட்டர் அகலமும், 5 செண்டி மீட்டர் உயரமும் உள்ளது.
கடந்த வருடம் இதே பகுதியில் நடந்த அகழாய்வு பணியில் இதே போல் செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அறிக்கை சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த போது, இந்த செங்கல்கட்டுமானத்தில் நன்னீர் பாய்ந்தோடியதற்கான அடையாளம் இருப்பதாக தெரிவித்தார். எனவே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த செங்கல் கட்டுமான அமைப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.


