தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு நடைபெற்று வரும் சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.67.81 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், உத்தரவின் பேரில், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள்
இன்று வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் கைப்பற்றப்பட்ட விவரங்கள் வருமாறு:
ரொக்கப் பணம்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத்தொகை – ரூ.67,81,375/-
மதுபானங்கள்: பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மொத்த மதிப்பு – ரூ.4,30,823/-
போதைப்பொருட்கள்: பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு – ரூ.7,36,890/-
இதனிடையே தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் அருகே, கண்காணிப்புக் குழு அதிகாரி வளர்மதி தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.98,000 ரொக்கப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முத்தையாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சேகர் (40) என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.98,000 ரொக்கப் பணத்தை, பறக்கும் படை அதிகாரிகள் தூத்துக்குடி வட்டாட்சியர் (தாசில்தார்) மற்றும் துணைத் தேர்தல் அலுவலர் திருமணி ஸ்டாலினிடம் முறையாக ஒப்படைத்தனர்.


