ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்பத்திருவிழா நடந்தது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களாக விளங்கும் நவத்திருப்பதி ஸ்தலங்களில் முதலாவது ஸ்தலமாக விளங்குகிறது ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில். மேலும் நாளாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத்தலமாக பாடியுள்ளார். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் விழா. இந்த விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் தெப்ப உற்சவம் நின்று போனது. எனவே தொடர்ந்து இந்த தெப்ப உற்சவத்தை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பக்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் இறுதியில் கள்ளபிரான் கோவிலில் தெப்ப உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தெப்பத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கள்ளபிரான் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மேல் கோவிலில் இருந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, நத்தம் வரகுண மங்கை எம்இடர்கடிவான் சுவாமி, திருப்புளியங்குடி காய்சினிவேந்தபெருமாள் ஆகிய மும்மூர்த்திகளும் எழுந்தளுரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தெப்பத்திற்கு உற்சவர்கள் கொண்டு வரப்பட்டனர். அதன்பின்னர் மேளதாளம் முழங்க தெப்பத்தில் சிறப்பு தீபாராதனையுடன் வலம் வந்தனர். 17 வருடத்திற்கு பின்னர் இந்த தெப்பத்திருவிழா நடைபெறுவதால் ஸ்ரீவைகுண்டம் பகுதி பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க சுவாமிகளை தரிசித்தனர்.
நாளையும் இந்த தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நாளை இரவு கள்ளபிரான் சுவாமிகள் மோகினி வேடத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


