தூத்துக்குடியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும் அனைவரையும் அரசு ஊழியர் ஆக்க கோரியும் ஓய்வூதியும் ரூபாய் 9000 வழங்க கோரியும் பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்க கோரியும் தூத்துக்குடியில், பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் சந்திரா தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் செயலாளர் ஜெயராணி பொருளாளர் ஹேமலதா, துணைத்தலைவர் பாப்பா, துணைச் செயலாளர் லதா, மாநில செயற்குழு உறுப்பினர் உமா ஈஸ்வரி, வட்டார தலைவர்கள் எழில் மகாலட்சுமி, உமா மகேஸ்வரி, பானு லட்சுமி, ரூபி, சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் ரசல், மாவட்ட பொருளாளர் அப்பாத்துரை, மாவட்ட துணைத் தலைவர் காசி, இணை செயலாளர் சிவக்குமார், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மறியலில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பழைய பேருந்து முன்பு தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


