தயாநிதி மாறன் (பிறப்பு: டிசம்பர் 5, 1966) ஒரு தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார். பின்னர் இந்தியாவின், நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான கலாநிதி மாறன், சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி ஆவார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு பிரியா என்னும் மனைவியும், கரண் மற்றும் திவ்யா என்னும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இவர் சென்னை, எழும்பூரிலுள்ள டான் பாசுகோ பதின்மநிலை உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.


