தூத்துக்குடி ஸ்ரீகாமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா நடைபெற்றது
தூத்துக்குடியில் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீகாமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான இன்ட்ராக்ட் கிளப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் கு.மீனாகுமாரி வரவேற்புரையாற்றினார். பள்ளி இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவர் விக்னேஷ்வர் கடந்த ஆண்டிற்கான செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.
ரோட்டரி கிளப் 3212 மாவட்டத்தின் 2026-2027 ஆம் ஆண்டிற்கு கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காந்தி விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,இன்ட்ராக்ட் கிளப்பின் புதிய தலைவர் ஜீவா, துணைதலைவர் நிவாஸ் சுஜித், செயலாளர் ஸ்ரீ ஹரி மற்றும் பொருளாளர் தருண்ராஜ் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் தம் சிறப்புரையில் இன்ட்ராக்ட்கிளப் அமைப்பின் நோக்கம் குறித்தும், மாணவர்கள் பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.அதிகமான நூல்களை படிக்க வேண்டும். நிறைய மரங்களை நட்டு வைத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
பள்ளி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் சமூக அறிவியல் பாடத்திற்கு பூமி உருண்டை மாதிரி, பள்ளி நூலகத்திற்கு நீட் தேர்வுக்குரிய பயிற்சி புத்தகங்கள், பாலர் வகுப்பிற்கு கரும்பலகை,கடவுளின் குழந்தையாக கருதப்படும் மாற்றுத் திறனாளி ஜெபர்சனுக்கு ரூ3000/- மதிப்புள்ள காலிபர் சாதனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பாசக்கரங்கள் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு, தேவையான மருந்துகளை, அதன் பொறுப்பாளர்கள் முத்துபாண்டி மற்றும் தாமோதரன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
நேசக்கரங்கள் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்திற்கு தேவையான அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் நிவாஸ் சுஜித் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். பள்ளி செயலாளர் அருணாச்சலம் தமது வாழ்த்துரையில் மாணவர்கள் தலைமைப் பண்புகளையும், பிறருக்கு உதவிடும் நற்குணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். உதவி கவர்னர் கண்ணன், ஸ்பிக் ரோட்டரி தலைவர் ரோட்டரியன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் முறையே பரதநாட்டியம், வரவேற்பு நடனம், மற்றும் கிராமிய நடனம் ஆகியவை அனைவரது ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. பள்ளி செயலாளர் அருணாச்சலம் வழிகாட்டுதலில் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், இன்ட்ராக்ட்கிளப் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகள் முழுவதையும் ஆசிரியை சண்முகபிரியா தொகுத்து வழங்கினார். இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் ராணி நன்றியுரை வழங்கினார்.