காரில் கடத்திய 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
ஆழ்வார்திருநகரி அருகே சட்டவிரோதமாக காரில் கடத்திய 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றைத் தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) லெட்சுமிபிரபா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் இன்னோஸ்குமார், முகம்மது பைசல், முதல் நிலைக் காவலர்கள் மாணிக்கராஜ், ராம்பிரகாஷ், காவலர்கள் சதீஷ், குணசுந்தர் மற்றும் சுந்தரபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (04.10.2021) ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்பலாபாத் பேரூந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டை வாசல் தெருவைச் சேர்ந்தவர்களான மந்திரமூர்த்தி மகன் சங்கரன் (எ) சங்கரசுப்பு (26), மாரிமுத்து மகன் ராமசாமி (26) மற்றும் பரமசிவன் மகன் நம்பிகணேஷ் (27) என்பதும், காரில் சட்டவிரோதமாகக் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 8 கிலோ 400 கிராம் கஞ்சாவையும், கடத்துவதற்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா கடத்தியவர்களைக் கைது செய்த தனிப்படையினரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.


