அன்னை தெரேசா 26 ஆகத்து 1910 – 5 செப்டம்பர் 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[3] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
அன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன, மேலும், இந்திய அரசு 2010-ல் அவரது நூற்றாண்டிற்காக அவரின் உருவம் பதித்த 5 ருபாய் நாணயம் வெளியிட்டு கௌரவித்துள்ளது.


