ஆழ்வார்திருநகரியில் ஆடி சுவாதியை முன்னிட்டு பட்சிராஜருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், ஆயிரம் கிலோ பழங்களால் அபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவத்திருப்பதிகளில் ஒன்பதாவது ஸ்தலமாக விளங்கும் ஆதிநாதர் கோவிலில் பட்சிராஜருக்கு தனி சந்நதி உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி சுவாதி விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆதிநாதர் கோவில் வடக்குமாடவீதியில் கோயில் மதில் சுவர்கள் மேல் பட்சிராஜரான கருடபகவான் சிலை உள்ளது.
இந்த நிலையில் இன்று ஆடி சுவாதியை முன்னிட்டு தனி சந்நதியில் உள்ள பட்சிராஜருக்கு காலை 7 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8.30 மணிக்கு திருமஞ்சனம் அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து மாலையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பட்சிராஜர் சன்னதி முன்புள்ள விளக்குத்தூணில் பத்தாயிரம் சிதறு தேங்காய் நேர்ச்சையாக எறியப்பட்டது. தொடர்ந்து சுவரில் உள்ள பட்சிராஜருக்கு நேர்ச்சையாக கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஆயிரம் கிலோ பழங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள், திரவியம், தேன், இளநீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் புதிய வஸ்திரங்களை சாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


