மதுரை, ஆக. 4 –
தாமிரபரணி ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் அதிகாரிகள் பதிலளிக்கும்படி மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணியில் கழிவுநீர்
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
‘தாமிரபரணி ஆறு’ முக்கிய வற்றாத ஆறாகும். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மனிதர்களின் பேராசை, ஆதிக்கத்தின் காரணமாக மாசுபாடு மற்றும் சுரண்டல் போன்ற சிக்கல்களை இந்த ஆறு சந்தித்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கழிவுநீர் கலக்கிறது. நெல்லையில் உள்ள 1,40,216 வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் சுமார் 180 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும் இந்த ஆற்றங்கரையில் கொட்டப்படுகின்றன.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை மேம்பாடு மற்றும் மாசு குறைப்பு என்ற திட்டத்திற்காக, ரூ. 59.05 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில், கருப்பந்துறை முதல் மணிமூர்த்தீஸ்வரம் வரையிலான 7 கி.மீ. நீள பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் 5 தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரை மேம்பாடு
இத்திட்டத்தில் பூங்காக்கள், புல்வெளிகள், வணிக வளாகங்கள், காட்சி மாடங்கள், மிதிவண்டி பாலங்கள், நீர் நடைபாதைகள் மற்றும் வணிகக்கடைகள் ஆகியவை அடங்கும். மேலும், இத்திட்டத்தில் 12 கி.மீ. நீளக் கால்வாய், தூர்வாருதல், கரைகளில் கற்கள் பதித்தல் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த டெண்டர் அறிவிப்பில், வெள்ளப்பெருக்கு மேலாண்மை, நதியின் சூழலியல் மற்றும் நீண்டகால நில அமைப்பியல் தாக்கங்கள் போன்ற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் பல முக்கியமான அம்சங்கள் இடம்பெறவில்லை. இத்திட்டம் ஆற்றின் உண்மையான அகலத்தை குறைக்கும். இதனால் வெள்ளம் ஏற்படும் நேரத்தில் புதிதாக கட்டப்படும் படித்துறைகள், மண்டபங்கள் சேதமடையும். இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவில்லை. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதிலளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வருகிற 5-ஆம் தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைத்தனர்


