தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை கனிமொழி எம்பி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய 1¼ வயது குழந்தை முத்துபவானி. நேற்று இரவில் வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தபோது வீட்டின் அருகே நின்ற பனை மரம் ஒன்று சூறைக் காற்றின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் முறிந்து அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை முத்துபவானி மீது விழுந்ததது.
இதில் பலத்த காயம் அடைந்த அக்குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து இன்று ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் கீதாஜீவன், மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.


