thanks nellai times and thiru Thamban ji
இந்த அகத்தியர் அருவிதான் வருடந்தோறும் கொட்டும் அருவி. சிறு குழந்தைகள் கூட ஆபத்து இன்றி குளிக்கக் கூடிய இடம். குற்றாலத்தினைத் தான் ஏழைகளின் ஊட்டி என்பார்கள். குற்றாலத்தில் சீசனில் மட்டும் தான் தண்ணீர் விழும்; ஆனால் அகத்தியர் அருவி வருடம் முழுவதும் கொட்டும். அகத்தியர் அருவி செல்லும் வழியில் பாலத்தின் அருகில் தேங்கி கிடக்கும் தண்ணீர் தானே என்று பலர் அங்கு குளிப்பது உண்டு. ஆனால் இந்த பள்ளமான இடத்தில் பல நீர் சுழல் உண்டு. இந்த சுழலில் சிக்கி கொள்வது ஆபத்துதான். அவர்களை அந்த சுழல் பள்ளத்துக்குள் இழுத்து சென்று உயிரை போக்க வைத்து விடும். அதன் பின் அவர்களின் உடலை காப்பாற்றி வெளியே கொண்டு வருவது மிகவும் சிரமமானது. இந்த பணியை செய்வதற்கென்று முற்காலத்தில் பல வாலிபர்கள் இருந்தனர். தற்போது அப்படி யாரும் கிடையாது. எனவே தீயணைப்பு படை வீரர்கள் தான் அவர்களை காப்பாற்றுகிறார்கள். இதுபோன்ற பல ஆபத்துக்கள் தாமிரபரணி கரையில் உள்ளது.
தாமிரபரணிகரையில் மற்றுமொரு ஆபத்து தரும் இடம் தலையணையாகும்.
தலையணைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. கோடை மேலழகியான் அணைக்கட்டு எனவும் அழைப்பார்கள். கோடையிலும் மலை மீது ஓடி வரும் தாமிரபரணியின் அழகை கண்டே இவ்வணைக்கு கோடை மேலழகியான் அணை என பெயர் வைத்து இருக்கிறார்கள். தலையணை சிறு பிள்ளைகள் கூட குளிக்க மிக வசதியாக இருக்கும். எனவே மிக அதிகமான கூட்டத்தினர் இந்த அணையில் குளிப்பார்கள். ஆனாலும் டைவ் அடித்து குளிப்பது இந்த பகுதியில் வாலிபர்களின் வீர விளையாட்டு. வாலிபர்கள் பல சமயத்தில் பாறையில் இருந்து துள்ளி குதிப்பது என்றும், பாறையில் மோதி உயிரிழப்பது உண்டு. அதன் பிறகு அவர்களின் உடலை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் உடல்கள் அங்கே உள்ள பாறைகளின் இடுக்கில் செருகி கொள்வது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற தாமிரபரணி கரையில் அழகான இடத்தில் ஆபத்துகள் அதிகம் காணப்படுகிறது. மலை மீது நின்று தலையணையை பார்த்தால் பூலோக சொர்க்க லோகம் போலவே காட்சியளிக்கும். பச்சை பசேலென்று காட்சியளிக்கும் மரஞ்செடிகளுக்கு இடையே வெள்ளியை உருக்கி விட்டார் போல ஆர்பரிக்கும் தலையணை தாமிரபரணியில் கண்கொள்ளா காட்சிதான்.
தமிழ் அறிஞர் பேராசிரியர் ச.வே.சு அவர்கள் இந்த தலையணையில் டைவ் அடித்த காலத்தினை பொற்காலம் என்றே போற்றுகிறார். அவரை பற்றி நான் பேட்டியெடுத்து குங்குமம் வாரஇதழில் எழுதியிருக்கிறேன். அவர், “நான் முதலை மீது தாவி குதித்திருக்கிறேன்” என பெருமையோடு கூறினார். ச.வே.சு. மிகப்பெரிய அறிஞர். இவர் தான் பாபநாசம் கல்லூரியை ஏற்படுத்தியவர். எழுத்து துறையில் நான் சிறப்புற இவரும் காரணம் . காவ்யா பதிப்பகம் மூலம் நான் எழுதிய 17 க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர் பேரறிஞர் ச.வே.சு அவர்கள்தான். அவரோடு பயணித்த அந்த காலம் பொற்காலம். அவர் தன்னை தமிழ்சங்கம் ஏற்படுத்திய ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருத்தப்ப தேவரின் மறுபிறவி என்று கூறிக்கொள்வார். அவரை பார்த்து நான் பிரமித்து நின்ற நாள்கள் உண்டு. அவர் நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கண நூல்களை உருவாக்கியுள்ளார். நூற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
என்னை போற்றி வளர்த்த அந்த அறிஞர் பெருமகனார் தற்போது நம்மோடு இல்லை.
தாமிரபரணி மலையில் இருந்து சமவெளியில் இறங்கும் இடத்தில் பாபநாசம் இருக்கிறது. இங்கே படித்துறை பார்க்க பார்க்க பரவசமாக விளங்குகிறது. “திருவாருர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, பாபநாசம் படி அழகு” என்று கூறுவார்கள். அந்த அழகாக படித்துறையும், ஒய்யாரமாய் காட்சி தரும் முதல் கைலாயமான பாபாநாசம் கோயில் கோபுர அழகும் இயற்கையும் செயற்கையும் நிறைந்த சொர்க்கலோகமாய் விளங்குகிறது.
பாபநாசம் கோயில் முன்பே ஓடி வரும் தாமிரபரணி மரண நீர் சூழல் மிக மோசமானது. அழகாய் இருக்கிறது. என இங்கே இறங்கி ஆபத்தில் சிக்கிகொள்ள கூடாது. இந்த இடத்தில் தான் பாரதியார் செல்லம்மாளுடன் வந்து, பாபநாசம் மீன்களுக்கு உணவு இட்டார் என கூற்று உண்டு.
அழகான இடம். அங்குள்ள மண்டபங்களும், படித்துறைகளும், மடங்களும், கோபுரங்களும் இயற்கையோடு செயற்கையான அழகை அள்ளித்தரும் அற்புத இடமாகும். இங்குள்ள மடங்களில் பல நீராழி மண்டபங்கள் உள்ளன. இந்த நீராழி மண்டபத்துக்குள் ஓடி வரும் நீரோட்டத்துக்குள் பல நாள் மூழ்கி தவம் இருக்கும் சித்த பெருமக்கள் இவ்விடத்தில் வாழ்ந்து உள்ளார்கள். ஆபத்து ஆபத்து என்று கூறுகிறோமே. எல்லோரையும் பயங்காட்டு வது போலவே உள்ளது என நீங்கள் கூறலாம். தப்பில்லை. அழகான இடங்களை வர்ணிக்கும் போது அங்கு நம்மை தாக்கும் பிரச்சனை குறித்தும் பேசுவது தவறில்லையே. எனவே தான் இந்த பிரச்சனை பற்றி கூறவேண்டியது உள்ளது. தாமிரபரணி மட்டு மல்ல, அதன் துணை நதியான மணிமுத்தாறு, சித்தாறு நதியிலும் ஆபத்து கொண்ட இடம் உள்ளது.
மணிமுத்தாறு அணையில், அணைக் கட்டும் போது மக்களுக்காக பெருந்தலைவர் காமராஜர் மூலமாக பச்சையாற்றில் இருந்து ஒரு அருவி வெட்டினார்கள். அந்த அருவிதான் மணிமுத்தாறு அருவி . இந்த அருவி மணிமுத்தாறு அணையை கடந்து மாஞ்சோலை செல்லும் வழியில் உள்ளது. சிறு பிள்ளைகள் கூட பயமின்றி குளிக்கலாம். ஆனால் அங்கும் பிரச்சனை தான். அங்குள்ள தடாகம் ஒன்று அமைதியாக உள்ளது. அங்கு தவறி விழுந்து விட்டாலும் அதோ கதிதான். உயிர் பலி வாங்கும் தடாகம் அது.
சிற்றாற்றில் பெருமை சேர்க்கும் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கிறோமே குற்றாலம் மெயின் அருவி. இங்கும் பல ஆபத்து உள்ளன. குற்றாலம் மெயின் அருவியில் அனைவரும் ஆர்வத்துடன் குளிப்போம். அங்கு குளிப்பதே ஆனந்தம். உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் அந்த அருவிக்கு மேலே பொங்குமாம் கடல் என்றொரு இடம் உண்டு. செண்பகதேவி கோயிலுக்கு போகும் போது அந்த இடத்தில் தான் சொல்லும் ஆபத்தான இடமுள்ளது. குறிப்பாக அச்சமில்லை அச்சமில்லை என்ற திரைப்படத்தில் சரிதா தண்ணீர் எடுப்பது போல ஒரு காட்சி வரும் பார்த்தீருப்பீர்கள். ஓடுகிற தண்ணீயில உரசி விட்டேன் சந்தனத்தை என்ற பாடல் வரும். அந்த பாடலுக்கு அவர் குடத்தினை கொண்டு வந்து ஒரிடத்தில் தண்ணீர் எடுப்பார். அழகான இடம். அங்கு தண்ணீருக்கு முத்தம் கொடுப்பார். அந்த இடத்தில் அடுத்த 10 வது அடியில் தான் பயங்கரமான அந்த உயிர் பலி வாங்கும் இடம் உள்ளது என்று கூறினால் யாரும் ஒத்துக்கொள்வார்களா?.
ஆம். அந்த இடத்தில்தான் பொங்குமாம் கடல் உள்ளது. இதில் குதித்தால் அதோ கதிதான். பல பனைஉயரத்துககு ஆழம் இருக்கும் உள்ளே செல்பவர் மூச்சடக்கி மேலே வருவதே கடினம். அந்த அளவுக்கு பிரச்சனை இருக்கிறது.இந்த பொங்குமாம் கடல் படத்தில் பார்த்தால் உங்களுக்கு தெரியும். மேலிருந்து விழுந்து . அந்த இடம் நிரம்பி அதன் பிறகு தான் அருவியாக கொட்டுகிறது.
திரி கூட ராசப்பர் இவ்விடத்தினை போற்றி புகழுவார். பொங்குமாம் கடலை திரிவேணி சங்கமம் என்றழைப்பார். அங்கு விழும் அருவியை வற்றாத வட அருவி என போற்றுவார். அதன்பின் அந்த தண்ணீர் அருவியாக விழுந்து, பின்னர் சிற்றாரு என்ற பெயருடன் கிளம்பி சுமார் 14 அணைக்கட்டு மூலமாக தென்காசி, நெல்லை மாவட்டத்தினை செழிப்படைய செய்து விட்டு சிவலப்பேரியில் வந்து பொருநையுடன் கலக்கிறது.
ஒரு காலத்தில் இந்த பொங்குமாம் கடல் அழகை ரசிக்க , மேல்பகுதிக்கு சென்றவர்கள் தடுக்கி விழுந்து இறந்து விடுவது உண்டு. பல நேரத்தில் தற்கொலை செய்பவர்கள் இவ்விடத்திற்கு தேர்வு செய்து இங்குள்ள பொங்குமாம் கடலில் விழுந்து உயிரை இழப்பது உண்டு. ஆனால் அவர்களின் உடல் கிடைப்பது கஷ்டம். எனவே அவர்கள் உடலை மீட்டெடுக்க திறமையான நபர்கள் இப்பகுதியில் வசித்து வந்தனர்.
தற்போது இவ்விடம் அருகே செல்ல முடியாத அளவுக்கு கம்பி வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.
குற்றாலத்தில் மற்றுமொரு விசேசம் உண்டு. இங்கு குளிக்க வரும் மக்கள் தங்களது தங்க நகைகளை தொலைத்து விட்டால், அதாவது தண்ணீரில் குளிக்கும் போது தவற விட்டுவிட்டால் அந்த நகைகளை தேடி கண்டு பிடித்து கொடுக்க வித்தியாசமான நபர்கள் இங்கு உள்ளனர்.
அவர்களை அடப்ப காரர்கள் என்று கூறுவர். இவர்கள் அருவிக்கு அடுத்து உள்ள பாலத்தின் அடியில் உள்ள மண்ணை தோண்டி அதை அரித்து பார்த்து அங்கிருந்து தொலைந்து போன மோதிரம் மற்றும் தங்க சங்கிலியை எடுத்துகொடுக்கிறார்கள். இந்த வேலையைசெய்யும் நபர்கள் தென்காசியில் ஒரே தெருவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் இடம் “அடப்ப கார தெரு” என அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூரிலும் கடலில் தெலைத்த பொருள்களை கண்டு பிடித்து தருபவர்கள் உண்டு. அவர்கள் தங்கள் முகத்தினை துணியால் கட்டிகொள்வார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. திறந்த கண்களுடன் தண்ணீரில் மூழுகி சாமான்களை தேடித்தருவார்கள்.
அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து. எனவே தண்ணீர் என்றாலே பயம் இருக்கவேண்டும்.
பாபநாசம் காரையாற்றில் தாமிரபரணி கரையில் பல்வேறு மூலிகை செடிகள் உண்டு. இதன் மூலம் மூலிகைமருத்துவம் நடந்து வருகிறது. அதில் மஞ்சள்காமாலக்கு மருந்து கொடுக்கும் அன்னம்மாள் பாட்டியும் ஒருவர் ஆவார்.
தாமிரபரணி காரையாறு என்னும் காணிகள் குடியிருப்புப் பகுதியைத் தாண்டி ஓரளவு சமதளத்தில் ஓடி வருகிறது. இங்குதான் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு காரையாறில் வாழ்ந்த அன்னம்மாள் என்னும் 98 வயது பாட்டி மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பிரசித்தி பெற்ற இந்தப் பாட்டி, தற்போது உயிரோடு இல்லை. இவரது வாரிசுகள் மருந்து கொடுத்து வருகின்றனர். இவர் கொடுக்கும் மூலிகையைச் சாப்பிட்டு விட்டு தாமிரபரணியில் முட்டளவு தண்ணீரில் நின்று தண்ணீரைக் குடித்தால் போதும் உடனே மஞ்சள் காமாலை நோய் பறந்து விடுகிறது.
அவரை பற்றிய பல அற்புத தகவல்கள் உண்டு. அதைப்பற்றி தொடர்ந்து காணுவோம்.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


