திருச்செந்தூர் கோவிலில் தங்க நகையில் பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உபயமாகவும், உண்டியல் காணிக்கையாகவும் செலுத்திய தங்க நகைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதை உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு செய்வதற்கு வசதியாக தங்க நகைகளில் உள்ள அரக்கு, அழுக்கு மற்றும் கற்கள் உள்பட பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மாலா தலைமையில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி பல்வேறு கட்டமாக நடைபெற்று வந்தன.
இதன் இறுதி கட்ட பணி நிறைவு பெற்றது. இந்நிலையில் பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணியை நேற்று கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா. அருள்முருகன், அறங்காவலர்கள், கணேசன், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், தூத்துக்குடி மண்டல துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


