திருச்செந்தூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை தொழில்வழிச்சாலைப்பணிகள் கடந்த வருடம் ஜுலை மாதம் துவங்கப்பட்டது.
சுமார் 635 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் வி.எம்.சத்திரத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை மிக விரைவாக நடந்தது. அதன்பின் செய்துங்கநல்லூர் ஊருக்குள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. செய்துங்கநல்லூரை பொறுத்தவரை நகரை அழகு படுத்தி இருபுறமும் சாக்கடை வறுகால் அமைத்து இரண்டு பஸ் நிறுத்தம், இலவச கழிவறை, கண்காணிப்பு கேமரா என நவீன வசதியில் பணிகள் நிறைவேற உள்ளது. எனவே இந்த பணி துவங்கிய உடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இந்த பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இருபுறமும் சாக்கடை வறுகால் அமைத்த பிறகு மக்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகள் விரைவாக அகற்றப்பட்டது. செய்துங்கநல்லூர் மக்கள் அதிகமாக கூடும் சந்தை அருகே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாதி தோண்டப்பட்ட பாலம் ஒரு பகுதி மட்டும் அமைக்கப்பட்டு மற்றொரு பகுதி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் ஏற்படுகிறது.
மேலும் இந்த பாலப்பணிகளால் சி.எஸ்.ஐ கோயில் தெருவில் இருந்து வரும் சாக்கடை வெளியே செல்ல முடியாமல் அங்குள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம் முன்பு தேங்கி கிடக்கிறது. மேலும் இங்குள்ள துவக்கப்பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள் கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பாலப்பணிக்காக சாலையின் நடுவே சுமார் 10 அடி உயரத்திற்கு இரும்பு கம்பிகள் நீண்டு காணப்படுகிறது. மேலும் மின் கம்பம் ஒன்று நடுரோட்டில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்து எற்பட்டு பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு பிறகு செய்துங்கநல்லூர் யூனியன் அலுவலகம், பெந்தகோஸ்தே சர்ச் அருகில் இரண்டு பாலம் அமைத்து முடித்து விட்டனர். ஆனால் செய்துங்கநல்லூர் ஊருக்குள் பணி மிக மந்தமாகவே நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் தியாகராசன் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் அவர்களிடம் நேரில் சென்று புகார் கூறியுள்ளார்.
அவர் கூறும் போது, செய்துங்கநல்லூரில் மைய பகுதி சந்தையாகும். மிகவும் பழமையான செய்துங்கநல்லூர் புதன் கிழமை சந்தையில் தற்போது சுமார் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள். இந்த சந்தை அருகே உள்ள பாலத்தின் ஒரு பகுதி தோண்டப்பட்டுள்ள இடத்தில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இதனை அகற்றினால் தான் மற்றொரு புறம் பாலப்பணிகள் தொடங்க முடியும் என்று கூறுகிறார்கள். இதற்கிடையில் புதன் கிழமை சந்தையன்று பெய்த பலத்த மழையால் இந்த பாலம் சாக்கடையால் நிரம்பி சாக்கடைகள் தெருக்குள் ஓடியது. இதனால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும், விற்பனை செய்ய வந்த வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தூர் நாற்றத்தால் சிக்கி தவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் நடுரோட்டில் கம்பியும் மின்கம்பமும் இருப்பதால் வேகமாக வரும் வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சலையை தோண்டி அப்படியே போட்டு இருகிறார்கள். இதனால் புழுதி படலமாக இவ்விடம் எப்போதும் காட்சியளிக்கிறது.
எனவே உடனே இந்த இரும்பு மின்கம்பத்தை அகற்றி பாலப்பணிகளை விரைவு படுத்தவும், இந்த பாலத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் சாலையை உடனே தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் அவர்களிடம் பேசியுள்ளேன். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக எம்.எல்.ஏ உறுதி கூறியுள்ளார்.


