தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது. அந்த சமயம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் சேதமடைந்த ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் டீசல் எஞ்சின் மூலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஒரு டீசல் எஞ்சின் மட்டும் திருச்செந்தூர் நோக்கி சோதனை ஓட்டம் சென்றது. இந்த சோதனை ஓட்டத்தில் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும், ரயில்வே தண்டவாளம் சேதமடைந்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று இரவு 7 மணி அளவில் திருச்செந்தூரில் மழை வெள்ளத்தால் நிறுத்தப்பட்டிருந்த பாசஞ்சர் ரயிலை இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட டீசல் எஞ்சின் மூலம் மீட்டு திருநெல்வேலிக்கு சோதனை ஓட்டமாக கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு மேல் திருநெல்வேலி செல்லும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் தண்டவாளத்தை இறுதிகட்டமாக பராமரித்து சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரை ரயில் தண்டவாளத்தை சரிபார்க்கும் பேக்கிங் ரயில் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதற்கு பின்னால் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தினை பராமரித்து வருகின்றனர். இதோடு தண்டவாள சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இன்றுடன் திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து ரத்து என்று ரயில்வேத்துறையினர் அறிவித்த நிலையில் பணிகள் நிறைவடைந்த காரணத்தினால் நாளை முதல் பாசஞ்சர் ரயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


